மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மீண்டும் தயாநிதி மாறன்

மீண்டும் தயாநிதி மாறன்

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் தயாநிதி மாறன். கடந்த 2004 முதல் 2007 வரை அவர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக தயாநிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தின.

தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உட்படப் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை முடிந்து பலமுறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கினார்.

தயாநிதிக்கு எதிராக இருந்த மற்றொரு வழக்கு பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு. தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதிமாறனின் நிறுவனமான சன் குழுமத்திற்கு, பிஎஸ்என்எல்-ன் 700க்கும் மேற்பட்ட அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் நேற்று (மார்ச் 14 ) தீர்ப்பு வழங்கினார்.

அதில், “இந்த வழக்கில் தயாநிதிமாறன் மோசடி செய்ய வேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் பிஎஸ்என்எல் இணைப்புகளை அவர் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ நிரூபிக்கவில்லை. கலாநிதிமாறன் சன் குழுமத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கும் அடிப்படை ஆதாரமில்லை. சன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்காத நிலையில், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை இந்த வழக்கில் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதேபோல பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தேவையான சான்றாவணங்கள் சிடி வடிவில் உள்ளன. அந்த சிடி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடைசி வரையிலும் அந்த சிடி ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சிபிஐ தனது குற்றச்சாட்டைச் சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தயாநிதி விடுத்த அறிக்கையில், “தொலைபேசி இணைப்புகள் தொடர்பான வழக்கில் என்னையும், அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட மற்றவர்களையும் விடுவித்து, இந்த வழக்கு அடிப்படை முகாந்திரம் இல்லாத வழக்கு என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தருணத்தில் எனது நேர்மையிலும், நாணயத்திலும் நம்பிக்கை வைத்து எனக்குத் துணையாக இருந்த தலைவர் கலைஞருக்கும், செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தோழர்களுக்கும், உற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நீதியின் மீது நான் வைத்திருந்த அசையாத நம்பிக்கை 2ஆவது முறையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நேர்மைக்கும், உண்மைக்கும் என்றும் அழிவில்லை. கருமேகங்கள் சில நேரம் சூரியனை மறைக்க முற்பட்டாலும், அதனைக் கிழித்தெறிந்து கதிரவன் வெளிவருவது போல இன்று உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனக்கு எதிரான இரண்டு வழக்குகளில் இருந்து விடுதலையானதையொட்டி தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் வாழ்த்துப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, தயாநிதி மாறனுக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon