மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

தடம் புரண்டதால் தாமதமான ரயில்கள்!

தடம் புரண்டதால் தாமதமான ரயில்கள்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் இன்ஜின் நேற்று (மார்ச் 14) தடம் புரண்டதால் அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பிலிருந்து தினமும் காலை 7.05 மணிக்கு, நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் புறப்படும். நேற்று காலை 6.30 மணியளவில் வழக்கம் போல் ஒன்றாவது பிளாட்பாரத்துக்கு கொண்டுவரப்பட்ட ரயிலின் இன்ஜினை மாற்றும் பணி தொடங்கியது. யார்டு லைனில் இருந்து புதிய இன்ஜினை, ஷண்டிங் டிராக்கில் கொண்டு வந்து ரயிலுடன் இணைக்கப்பட இருந்தது. அப்போது ஷண்டிங் டிராக்கில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே கேட் அருகே இன்ஜின் வந்து கொண்டிருந்தபோது திடீரெனத் தடம் புரண்டது. இன்ஜின் டிரைவர் நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தபோது, ஷண்டிங் டிராக்கில் இருந்து இன்ஜின் முழுவதும் கீழே இறங்கி நின்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக இதைச் சரிசெய்ய முடியாது என்பதால், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட இன்ஜினை அப்புறப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தினர். தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஜின் தடம் புரண்டதன் காரணமாக, நாகர்கோவில் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் குருவாயூர், பெங்களூரு, கோவை , கன்னியாகுமரி, மும்பை விரைவு ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த விபத்தால் பயணிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

2015-2016ஆம் ஆண்டில் ரயில் தடம் புரண்டு 107 விபத்துகளும், 2016-2017ஆம் ஆண்டில் 104 விபத்துகளும் நடந்துள்ளதாக இந்திய ரயில்வேத் துறை கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon