மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

ஜிடிபி: 7.3 % வளர்ச்சி காணும் இந்தியா!

ஜிடிபி: 7.3 % வளர்ச்சி காணும் இந்தியா!

2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி புதன்கிழமை (மார்ச் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிற நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாக இருக்கும். தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கண்டு 8 சதவிகிதத்தை அடையும். இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும். வரும் நிதியாண்டில் (2018-19) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதமாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் வரி சீர்திருத்த நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றால் கடந்த சில காலாண்டுகளாகவே இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவுக்கு சரிவைக் கண்டது. குறிப்பாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதமாகக் குறைந்தது. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி இந்த நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டில் (2016-17) இதன் மதிப்பு 7.1 சதவிகிதமாக இருந்தது. அதேபோல இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையில் 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியா 7 முதல் 7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி காணும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon