மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

முழுமையான மருத்துவக் காப்பீடு வழங்கக் கோரியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்களும் நேற்று (மார்ச் 14) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டார்கள்.

"மாநில அரசின் அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும், யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் மருத்துவக் காப்பீடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு ஜூலை முதல் செயல்படுத்தப்பட்ட இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரத்தின்படி 4,78,581 ஓய்வூதியர்களும், 2,31,396 குடும்ப ஓய்வூதியர்களும் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து 4 ஆண்டு காலத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகை தோராயமாக ரூ.455 கோடி ஆகும். ஆனால் 4 ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.100 கோடிகூட செலவழிக்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசு இதனைக் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தைப் பயனுடையதாக மாற்றி அமைத்துத் தர வேண்டும்.

மருத்துவச் சிகிச்சைக்கான முழுமையான செலவுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். மேலும் அரசு பொது மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனுமதிப்பது போல ஓய்வூதியர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்'' என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநிலச் செயலாளர் முருகேசன் தெரிவித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon