மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பங்குனி மாதப் பூஜைகளுக்காக நேற்று மாலை (மார்ச் 14) திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு சாமி ஐயப்பனுக்கு 5 நாட்கள் விசே‌ஷ பூஜைகள் நடத்தப்படும். விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழாவின்போதும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். அதன்படி, பங்குனி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5.30 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாராதனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று காலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷத் பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று தொடங்கிய பூஜைகள் 19ஆம் தேதி வரை தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களப பூஜை நடைபெறும். அன்று இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.

மார்ச் 20ஆம் தேதி, மாலை 5.30 மணிக்கு பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழாவுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். 21ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் மதியம் உற்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, 29ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி, காலை 11 மணிக்குப் பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது.

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5.30க்குத் திறக்கப்பட்டது. பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட்டது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon