மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் தனது மகள் நமீதாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள், கிருஷ்ணவள்ளி,விமலா ஆகியோர் முன்பு நேற்று(மார்ச் 14) விசாரணைக்கு வந்தது.அதையடுத்து , மேலப்பாளையம் போலீசார் நமீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.சரியாக படிக்கவில்லை என்று அப்பா திட்டியதால் வீட்டை விட்டு சென்றேன் என நமீதா கூறியுள்ளார். இதையடுத்து, நமீதாவை திட்டமாட்டேன் என நீதிபதிகளிடம் அவரது அப்பா கூறியுள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்திய மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேர் குழந்தைகள். இது உலக குழந்தைகள் மக்கள் தொகையில் 19 சதவிகிதம் ஆகும். தற்கொலை செய்வது, ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்வது,பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக மாணவர்கள் வீட்டை விட்டு செல்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மனநிலை ஆரோக்கியமாக இருக்க தேவையான முக்கியத்துவத்தை பெற்றோர் கொடுப்பதில்லை.குறிப்பாக, பதின்பருவத்தில் உடல் ரீதியில் ஏற்படும் மாற்றங்கள்,பெற்றோர்களிடையே ஏற்படும் தகராறு,கல்வி நெருக்கடி, ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை என்று தெரிவித்தனர். இதனால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகுகின்றனர்.

குழந்தைகளுக்கு மனநலம் குறித்து கற்பிப்பதற்கு சிறந்த இடம் பள்ளி. அதனால், பள்ளியில் ஆசிரியர்களும்,வீட்டில் பெற்றோர்களும், மனநல மருத்துவர்களும் மாணவர்களின் மனநலம் மேம்பட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் மனநலத்தை பேணி காக்க , மாநில தொழில் கல்வி இயக்குநர் தலைமையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி செயலர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.சுப்பையா, மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்பிரமணியன், பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனை பதிவாளர் கே.சேகர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தற்போது அமலில் உள்ள தேர்வு முறை, பாடத்திட்டம், பெற்றோர் மாணவர் உறவு, மாணவர்கள் மனநிலை, ஆசிரியர்களின் பிரச்சனைகள் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை பத்து நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon