மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தீராத வங்கிக் கடன் பிரச்சினை!

தீராத வங்கிக் கடன் பிரச்சினை!

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியால் மட்டுமே வங்கி மோசடிகளைத் தடுக்க முடியாது என, வங்கி மோசடி விவகாரத்தில் வாய் திறந்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. வங்கி மோசடிகள் இவ்வாறாக நீண்ட காலமாகவே தொடர்ந்து வரும் நிலையில், அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி குஜராத் தேசியச் சட்டப் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பேசுகையில், “உங்களைப் போலவே ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் நாங்களும் வங்கி மோசடிகளைக் கண்டு மிகுந்த கோபமும் வேதனையும் கொண்டுள்ளோம்.

நாங்கள் அந்த நீலகண்டனைப் போல விஷத்தை உட்கொண்டு, எங்கள் மீது வீசப்படும் அனைத்து விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு, வங்கி மேம்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தொழில் துறையில் உள்ள ஒரு சில பெரும் புள்ளிகளால் நம் நாட்டின் எதிர்காலப் பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. வங்கி மோசடிகளைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தனியார் துறை வங்கிகள் மீது எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை விட பொதுத் துறை வங்கிகள் மீதான அதிகாரம் குறைவாகவே இருக்கிறது. நீங்கள் விஷத்தைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தாலும், அதைத் தொடர்ந்து உட்கொண்டு வங்கி நலனுக்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டே இருப்போம்” என்று வங்கி மோசடி விவகாரத்தில் நீண்ட நாள் மவுனம் கலைந்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon