மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கர்நாடகா எம்பிக்களை சந்திக்கும் சித்தராமையா

கர்நாடகா எம்பிக்களை சந்திக்கும் சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வார காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாளை (மார்ச் 16) கர்நாடகாவைச் சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமெனக் கோரி, சென்னை தலைமைச்செயலகத்தில் பிப்ரவரி 22ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதுவரை மோடி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார் பழனிசாமி. கடந்த 5ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கியது. இதில் கலந்துகொள்ளாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கைவிடுத்து போராடி வருகின்றனர் தமிழக எம்பிக்கள்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த எம்பிக்களைச் சந்தித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா.

முன்னதாக, கடந்த 8ஆம் தேதியன்று பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. இதனையொட்டி, இன்று இரவு டெல்லி செல்கிறார் சித்தராமையா. நாளை காலை 9 மணியளவில் கர்நாடகா இல்லத்தில், அவர் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக, கர்நாடகா எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதியன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த நான்கு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென கர்நாடகா மாநில தரப்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon