மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

முடிவின் தொடக்கம்?

முடிவின் தொடக்கம்?

பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 14) வெளியானது. சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகள் பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜகவின் பின்னடைவை ஒரு முடிவின் தொடக்கம் என்று வர்ணித்துள்ளன எதிர்க்கட்சிகள்.

2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத்தும், புல்பூர் தொகுதியில் கேசவ் பிரசாத் மவுரியாவும் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றதையடுத்து, இவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அம்மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வர்களில் ஒருவராக மவுரியாவும் பதவியேற்றனர்.

இந்த இரு தொகுதிகளிலும், கடந்த 11ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோல, பீகாரின் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் பபுவா, ஜகனாபாத் சட்டமன்றத் தொகுதிகளிலும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தின. உ.பி மாநிலத்தில் சமாஜ்வாதிக்கு ஆதரவு தெரிவித்தது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டது.

பபுவா தொகுதியில் மட்டுமே பாஜகவின் ரிங்கி ராணி வெற்றி பெற்றார். கோரக்பூர், புல்பூரில் சமாஜ்வாதி கட்சியும், ஆராரியா மற்றும் ஜகனாபாத் தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் -பாஜகவின் கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது. அதனால், இந்த இடைத்தேர்தல் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளன எதிர்க்கட்சிகள். ஆனால், இடைத்தேர்தல் முடிவுகளால் பாதிப்பு ஏதுமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது பாஜக தரப்பு.

மம்தா பானர்ஜி: பெரிய வெற்றி கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளுக்காக, மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முடிவின் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

பீகாரின் ஆராரியா, ஜெகனாபாத் தொகுதிகளில் வெற்றி பெற்றதற்காக, லாலுபிரசாத் யாதவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்

இதற்கு, ‘நன்றி, நாம் ஒன்றாக இணைந்து போரிட்டு வெற்றி பெறுவோம்’ என்று பதிலளித்துள்ளார் லாலுபிரசாத் யாதவ்.

லாலுபிரசாத் யாதவ்: நீதியை நிலைநாட்டியதற்காக, லட்சக்கணக்கான பீகார் மக்களுக்கு நன்றி. பொய்க்கு எதிராக, உண்மை வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இம்மாநிலத்தில் கட்சியின் பலத்தை அதிகரித்து, வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபடும். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரே இரவில் அது சாத்தியமில்லை.

சீதாராம் யெச்சூரி: பாஜகவின் சரிவு ஆரம்பமாகிவிட்டதை, இந்த முடிவுகள் காட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து போகாது என்பதை இந்தத் தேர்தல் வெளிக்காட்டியுள்ளது. நாம் வெற்றி பெற்று, பாஜகவைத் தோற்கடிக்க முடியுமென்ற நம்பிக்கையைத் தந்துள்ளது. மிகப்பெரிய கூட்டணி அமைவது மிகச்சரியானது என்பதை உணர்த்தியுள்ளது.

அகிலேஷ் யாதவ்: பாஜக அரசின் முறையற்ற நிர்வாகத்துக்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தந்த மாயாவதிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2017 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. தேர்தல் பிரசாரத்தில் அளித்த பொய்யான வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட பாஜக நிறைவேற்றவில்லை. அதற்கான பாடத்தை, இந்தத் தேர்தலில் மக்கள் புகட்டியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்திருக்கும்.

தேஜஸ்வி யாதவ்: ஒரே இரவில் அணிமாறிய நிதிஷ்குமார், தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்; அரசியலுக்குத் தான் பொருத்தமற்றவர் என்பதை உணர்த்தியுள்ளார். நீதிநெறி தவறிய, மனசாட்சியற்ற, அரசியல் விளையாட்டுகளுக்கு மக்கள் வெகு விரைவில் முடிவு கட்டுவார்கள். ஏற்கெனவே, நிதிஷுடன் வைத்துள்ள கூட்டணியைச் சுமையாகக் கருதத் தொடங்கிவிட்டது பாஜக.

மு.க.ஸ்டாலின்: இடைத்தேர்தலில் அற்புதமான வெற்றியைப் பெற்றதற்காக அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவ் மற்றும் மாயாவதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றுவதற்கு, இந்த வெற்றி ஓர் அடையாளம். ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை தான் சிறந்தது என்பதை மீண்டும் ஒருமுறை மக்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

வைகோ: உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியிலேயே பாஜக தோற்றிருப்பது, அந்தக் கட்சியின் அஸ்திவாரமே அழிந்தது போல இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பினராயி விஜயன்: தவறான வாக்குறுதிகளால் அளவுக்கு மீறி கட்டமைக்கப்பட்ட மோடியின் மாயாஜாலம் முடிவுக்கு வந்திருப்பதைக் காட்டியுள்ளது உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள்.

யோகி ஆதித்யநாத்: கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியைக் குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்குக் காரணம். சில உள்ளூர் பிரச்சினைகளே தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டன. எங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துவிட்டோம். மத்திய அரசின் திட்டங்களுக்கும் இந்தத் தோல்விக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சித்தராமையா: உத்தரப் பிரதேச முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வெற்றி பெற்ற தொகுதிகளை இழந்து வாடி நிற்கிறது பாஜக. வரலாற்று வெற்றி பெற்றதற்காக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்தது முக்கியப் பங்கை இந்தத் தேர்தலில் ஆற்றியுள்ளது. இனிமேலாவது, கர்நாடகாவுக்கு வந்து வளர்ச்சி குறித்து பேசுவதை ஆதித்யநாத் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தலில் பாஜக அடைந்திருக்கும் தோல்வியானது, 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கு வித்திட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பாஜகவுக்கான எதிர்ப்பும் பகுஜன் சமாஜ் மற்றும் இதர கட்சிகளின் சமாஜ்வாதி ஆதரவும் இடைத்தேர்தலில் வெற்றியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியைப் பாம்பும் கீரியும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்று தரம் தாழ்ந்து விமர்சித்தார் உ.பி முதலைமைச்சர் ஆதித்யநாத். ரம்ஜான் கொண்டாட மாட்டேன் என்று சட்டமன்றத்தில் பேசினார். சமாஜ்வாதி கட்சியை அவுரங்கசீப்பின் கட்சி என்றனர் பாஜகவினர். அதற்காக, தற்போது மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்” என்று கூறினார். மேலும், இந்த வெற்றியானது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான பிணைப்புக்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, நேற்றிரவு லக்னோவிலுள்ள மாயாவதியின் வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார் அகிலேஷ் யாதவ். இந்தச் சந்திப்பு, தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon