மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை : தமிழகத்துக்கான தலைமை நீதிபதி ஏன் இல்லை?

சிறப்புக் கட்டுரை : தமிழகத்துக்கான  தலைமை நீதிபதி ஏன் இல்லை?

வழக்கறிஞர் அருண் வைத்தியலிங்கம்

நீதித் துறையில் தமிழகத்துக்கான நியாயங்கள் மதிக்கப்படவில்லை என்று காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைமேற்கோள் காட்டி தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதித் துறைக்குள் இருக்கும் நீதிபதிகள் நியமனத்தில்கூட தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்தமுக்கியப் பிரச்சினையைத் தற்போதைய தமிழக அரசு திரும்பிக்கூடப் பார்க்காமல் மௌனம் காக்கிறது என்றும் நீதித் துறை வட்டாரத்தில் வேதனைக் குரல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாம் வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி முதல்...

இந்திய நீதித் துறை என்பது சுதந்திர இந்தியாவை விட மூத்த வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்இந்தியாவில் பல்வேறு துறைகளைக் கட்டமைத்தது போன்று நீதித் துறையையும் கட்டமைத்தனர்.

இந்தியா கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இருந்து, பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சியின் கீழ் வந்தபோது, நீதித் துறையில்கட்டமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டன.

கம்பெனி ஆட்சி இருந்தபோது, இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்தின் தலைமையகத்திலும், ‘சாடர் அதாலத்’ என்ற அந்தந்த பகுதிகளுக்கான நீதிமன்றங்கள் இயங்கி வந்தன.

இவை மகாராணி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தபோது, ’இந்தியன் ஹைகோர்ட்ஸ் ஆக்ட் 1861’ என்ற சட்டத்தின் மூலம்நீக்கப்பட்டு அவை உயர் நீதிமன்றங்கள் ஆக மாற்றப்பட்டன. இந்தச் சூழலில் 26-6-1862 அன்று மகாராணி இந்தியாவில் இருந்த மூன்று மாகாணங்கள் ஆன மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா ஆகியவற்றுக்கு ’சார்ட்டடு உயர் நீதிமன்றங்கள்’ என்ற அந்தஸ்துடன் இயங்க ஆணையிடுகிறார். இவை மட்டுமே ’ஹைகோர்ட் ஆஃப் ஜுடிகேச்சர்’ என்று அந்தந்தமாகாணங்களின் பெயருடன் அழைக்கப்பட்டன. இப்போதுள்ள ஒவ்வொரு மாநிலத்திலுள்ள எந்த உயர் நீதிமன்றத்துக்கும்இந்த ’ஹைகோர்ட் ஆஃப் ஜுடிகேச்சர்’ என்ற சிறப்பு கிடையாது.

இதன் பின் 1935ஆம் ஆண்டு உயர் நீதிமன்றங்களை விட உயர்ந்த நீதி மன்றமாக, இந்தியன் ஃபெடரல் கோர்ட்உருவாக்கப்பட்டது. இந்த ஃபெடரல் கோர்ட்தான் 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றமாக வடிவம் பெற்றது.

மாநிலங்கள் தோறும் உயர் நீதிமன்றங்கள், அவற்றுக்கெல்லாம் உச்சமாக டெல்லியில் உச்ச நீதிமன்றம் என்ற நீதித் துறை பொறியமைப்பு இன்றும் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்!

நாடு சுதந்திரம் பெற்றது முதல் மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த அந்தந்த மாநில மொழி பேசும்நீதிபதியே தலைமை நீதிபதியாக இருந்தார். அந்தந்த மாநில நீதிபதிகள் அந்தந்த மாநிலத்திலேயே பணியாற்றினார்கள். அத்திபூத்தாற்போல் ஏதாவது ஒரு நீதிபதி எப்போதாவது வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவார்.

இந்த நிலையில் 1980ஆம் ஆண்டு அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஒரு கொள்கை முடிவெடுத்தது. அப்போது இருந்த மத்திய சட்ட அமைச்சர் சிவசங்கர் மூலமாக அன்றைய தலைமை நீதிபதிக்கு மே 15 1980இல் மத்திய அரசுஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை முடிவு கோப்பு அனுப்பப்பட்டது.

அதாவது, ’அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மாநில மொழி பேசக் கூடிய தலைமை நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களில் இருப்பதால், இரண்டாவது, மூன்றாவது நீதிபதிகளாக இருப்பதால்... . தங்களின் உறவினர்களை நீதிபதியாக்குவது, தங்களின் வாரிசுகளை உருவாக்குவது, உள்ளூர் தொடர்புகளை வலுப்படுத்திப் பயன்பெறுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனால் இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவில்லை என்றும், இவற்றைச் சரி செய்வதற்காக... ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் தலைமை நீதிபதியும், மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அந்தக் கொள்கை முடிவுக் கோப்பு.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி சட்டத் துறை அமைச்சரோடு அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பகவதியே ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், ‘இது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால், இதை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தினால், நீதித் துறையில் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, இந்தக் கொள்கை முடிவை ஒரே நேரத்தில் அமல்படுத்தாமல் பகுதி பகுதியாக அமல்படுத்தலாம்’ என்று ஆலோசனை கூறினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.

மேலும், மாநில உயர் நீதிமன்றங்களுக்கு நிரந்தர நீதிபதிகள் நியமனத்திலும் மத்திய அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை வைக்கிறார் தலைமை நீதிபதி. ஏனென்றால் அப்போது தற்காலிக நீதிபதிகளையே நியமித்து அவர்களையே இரண்டிரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பது வழக்கமாக இருந்தது.

கொள்கை முடிவுக்கு முதல் பலி தமிழ்நாடு!

மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி என்பவர் அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கொள்கை முடிவைப் பகுதி பகுதியாக அமல்படுத்தலாம் என்ற யோசனையின் முடிவில்... டெல்லியின் கண்களை உறுத்தியது தமிழ்நாடுதான். (அன்றில் இருந்து இப்போது வரை மாநில உரிமைகளைப் பறிப்பது என்றால் தமிழ்நாட்டின் மீதே டெல்லிக்கு முக்கிய கண் போலிருக்கிறது)

அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.சி.பி.சிங் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் நேர்மைக்குப் புகழ்பெற்ற எம்.எம்.இஸ்மாயில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார். நீதிபதி இஸ்மாயிலைக் கேரளாவுக்கு மாற்றிவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கே.பி.என்.சிங் நியமிக்கப்பட்டார். ஆக, தேசிய ஒற்றுமையைச் கட்டிக்காப்பதற்காகச் சில காரணங்களைச் சுட்டிக்காட்டி டெல்லிக்காரர் தமிழக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆக்கப்பட்டார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.இஸ்மாயில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எவ்விதப் புகாரும் இன்றியே அவர் மாற்றப்பட்டார்.

இந்த மாற்றத்தின் விளைவுகள் இன்றுவரை எதிரொலிக்கின்றன.

(தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்)

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon