மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஐந்து மடங்கு உயரும் விமானச் சேவை!

ஐந்து மடங்கு உயரும் விமானச் சேவை!

இந்தியாவின் பயணிகள் விமானச் சேவையை அடுத்த 15 முதல் 20 வருடங்களுக்குள் 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (மார்ச் 14) அவர் அனைத்திந்திய மேலாண்மைக் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "பயணிகள் விமானச் சேவையை அடுத்த 15 முதல் 20 வருடங்களுக்குள் 5 மடங்கு உயர்த்தி ஆண்டுக்கு 100 கோடி சேவைகளை (பயணங்கள்) வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நிறைவேற்ற புதிய பசுமை விமான நிலையங்கள் அமைப்பதோடு, திறன் வாய்ந்த மனித ஆற்றலைப் பயன்படுத்தி நிறைவேற்றுவோம். 100 கோடி விமான சேவைகள் இலக்கு என்பது வெறுமனே விமானங்களை மட்டும் பயன்படுத்தி வழங்கப்படாது. மாறாக ஹெலிகாப்டர்கள், கடல் விமானங்கள், பயணிகள் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றையும் சேர்த்தே இந்த இலக்கு நிறைவேற்றப்படும்.

இதற்கான பல்வேறு பணிகள் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும். இதன்மூலம் புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஆளில்லா சிறிய விமானங்கள் தயாரிப்பிற்கான பெரிய நிறுவனங்கள் வரும் ஆண்டில் தொடங்கப்படும். ஆளில்லா சிறிய விமானங்களுக்கான விதிமுறைகள் வகுக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இத்துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். விமானத் துறையின் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது" என்றார்.

2013ஆம் ஆண்டில் இந்தியாவின் பயணிகள் விமானச் சேவையின் (பயணங்கள்) எண்ணிக்கை 10 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 கோடியை நெருங்கியுள்ளது.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon