மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக எழுந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அரங்கில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசின் கடன் அதிகரித்துவரும் நிலையில் மக்களிடையே பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு தானிய உற்பத்தியின் இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தமிழகம் எட்டியதா என்பது தற்போதைய பட்ஜெட்டில்தான் தெரியவரும். நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மது விற்பனையை அரசிடமிருந்து தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளின் அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், புதிய வேலைவாய்ப்புத் திட்டம் எனப் பல்வேறு துறைகளில் அரசின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளை பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி நடைமுறையில் பொருள்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களைவிட வாங்கும் திறன் அதிகம் உள்ள மாநிலங்களுக்கே அதிக வருவாய் கிடைக்கும். இதன்படி ஜிஎஸ்டியால் வருவாய் அதிகம் பெறும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. எனவே, இதன் பலன்கள் இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கலாம்.

கடன் சுமையுடன் தமிழக பட்ஜெட்

தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கல்வித் துறைக்கு மட்டுமே ரூ.35,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்த அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் கடன் சுமை 2018 மார்ச் மாத நிறைவில் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருப்பதாகவும், அவர் தனது உறையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது தமிழக அரசின் கடன் சுமை கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடியை எட்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் இன்று தமிழக பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்போடு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த சிலரிடம் நியூஸ் டுடே ஊடகம் கருத்துக் கேட்டது. அதில், பாலாஜி ரங்கநாதன் என்ற வங்கியாளர், “தற்போதைய நிலையில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 12ஆவது இடத்தில் இருக்கிறது. எனவே அதிக முதலீடுகளை ஈர்க்கும் அம்சங்கள் கொண்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்க வேண்டும். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்தும் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக நிதியுதவி மற்றும் மானிய உதவி வழங்கப்பட வேண்டும். அதேபோல, மாநில அரசின் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon