மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பினராயி விஜயனைச் சந்தித்த தமிழக விவசாயிகள்!

பினராயி விஜயனைச் சந்தித்த தமிழக விவசாயிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தக் கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துவருகிறது கர்நாடகா மாநில அரசு. அங்குள்ள கட்சிகளும், இதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில், பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திலுள்ள விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைச் சந்திக்க, இதுவரை பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதற்கு எதிராக, கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் இறங்கினர் தமிழக விவசாயிகள். அப்போது, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பல விவசாயிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன், நேற்று (மார்ச் 14) கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் பி.ஆர்.பாண்டியன். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. டி.பி.கே.ராஜேந்திரன், எஸ்.ஆதிமூலம், புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆண்டோ, புளியரை செல்லத்துரை, இரணியல் முருகேசப்பிள்ளை உள்ளிட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் உடனிருந்தனர்.

கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வேண்டுமென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரத்தில் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார் பினராயி விஜயன்.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon