மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை - ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் துருவ நட்சத்திரம்!

சிறப்புக் கட்டுரை - ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் துருவ நட்சத்திரம்!

சைபர் சிம்மன்

ஒரு பாப் நட்சத்திரம் போல அவர் புகழ் பெற்றிருந்தார். ஒரு கால் பந்து நட்சத்திரத்தின் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. விஞ்ஞானிகளும் வியக்கக்கூடிய அறிவாற்றல் அவரிடம் இருந்தது. அதேநேரத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கிண்டலும் கேலியும் அவரிடம் இருந்தன. இவை எல்லாவற்றையும்விட, மோட்டார் நியூரான் நோய் பாதிப்புக் காரணமாக இன்னும் இரண்டாண்டுகள் மட்டுமே உயிர்வாழ முடியும் என 21 வயதில் மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டதை மீறி, 50 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்ந்து இடைப்பட்ட காலத்தில் பிரபஞ்சத்தின் புதிர்களைப் புரிந்துகொள்ள உதவும் கோட்பாடுகளையும், கருந்துளைகளை விளக்கும் கருத்தாக்கத்தையும் உலகுக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

நோயின் தாக்கத்தால் சக்கர நாற்காலியிலேயே வாசம் செய்ய வேண்டிய நிலை வந்ததை மீறி அவர் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் குரலை இழந்த பிறகும், அவர் மென்பொருள் மூலம் தனது சிந்தனைகளைப் பேசியபடி மன உறுதியின் எல்லைக்கு ஊக்கம் அளிக்கும் உதாரணமாக இருந்திருக்கிறார்.

நம் காலத்தின் புகழ்மிக்க விஞ்ஞானி என வர்ணிக்கப்படும் ஹாக்கிங் பிரபஞ்சம், காலம், வெளி ஆகியவை தொடர்பான ஆய்வுக்காக அறியப்படுவதோடு, தனது விஞ்ஞானத்தை வெகுமக்களிடம் கொண்டு சென்றவராகவும் திகழ்கிறார். அவர் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் புத்தகம், பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள் போன்ற சிக்கலான விஷயங்களைப் பேசினாலும், விற்பனையில் சாதனை படைத்து அவரது அறிவியலை வீட்டின் வரவேற்பறைக்குள் கொண்டு சென்றது.

மென்பொருள் குரல் மூலமே பேச முடியும் எனும் நிலையிலும், எண்ணிலிடங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்று வந்திருக்கிறார் ஹாக்கிங். வாழ்க்கை முன்வைத்த சோதனைகளை எல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஹாக்கிங்கின் அறிவியலும் மட்டும் அல்ல; வாழ்க்கையும் வியக்க வைக்கக்கூடியது.

ஹாக்கிங்கின் இளமை பருவம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். உயிரியல் ஆய்வாளரான அவரது தந்தை ஜெர்மனி குண்டு வீச்சில் இருந்து தப்புவதற்காக லண்டனிலிருந்து இங்கு குடிபெயர்ந்திருந்தார். லண்டன் மற்றும் ஆல்பன்சில் வளர்ந்த ஹாக்கிங் ஆக்ஸ்போர்டில் இயற்பியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வு மேற்கொண்டார்.

இளமைப் பருவத்தில் அவருக்குப் படகுப் பயிற்சி மற்றும் குதிரையேற்றத்தில் விருப்பம் இருந்தது. ஆனால், சோதனையாக 21ஆவது வயதில் மோட்டார் நியூரான் பாதிப்பு எனப்படும் உடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோயால் அவர் தாக்கப்பட்டார். அவரால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். நோயின் தாக்கம் காரணமாக அவர் உடலியக்கம் முடங்கியது. அவர் தனது திருமணத்துக்குத் திட்டமிட்டிருந்த நிலையில் இத்தகைய நிலைக்கு இலக்கானார்.

ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோயின் முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. நோயோடு போராடியபடி வாழ்ந்துகொண்டிருந்த ஹாக்கிங் இதனால் புதிய உத்வேகம் பெற்றார். மரணத்தின் நிழலைக் கண்டு அஞ்சாமல் தான் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தினார். திருமணமாகிக் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.

“ஆச்சர்யப்படும் வகையில் முன்பைவிட இப்போதுதான் வாழ்க்கையை அதிகம் அனுபவிக்கிறேன். என்னுடைய ஆய்விலும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்” என அவர் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்துகொள்வதே அவரது ஆய்வின் நோக்கமாக இருந்து. “எனது குறிக்கோள் எளிதானது. பிரபஞ்சம் ஏன் அது இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது, பிரபஞ்ச இருப்புக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பிரபஞ்சம் தொடர்பான முழுமையான புரிதலைப் பெறுவதே என் நோக்கம்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹாக்கிங்கின் அறிவியல்

கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வைத் தொடர விரும்பிய ஹாக்கிங், பிரெட் ஹாயல் எனும் புகழ்பெற்ற காஸ்மாலிஜிஸ்ட்டின் கீழ் பயில விரும்பினார். ஆனால், அதற்கான வாய்ப்புக் கிடைக்காமல் டென்னிஸ் ஸ்கியாமா எனும் மற்றொரு ஆய்வாளரின் கீழ் பயிலத் தொடங்கினார். இரண்டாமாண்டு ஆய்வின் போது ஹாக்கிங்ம், ரோஜர் பென்ரோஸ் எனும் ஆய்வாளருடன் இணைந்து, கணிதவியல் புரிதல் அடிப்படையில் முக்கியக் கோட்பாடு ஒன்றை முன்வைத்தார். அழியும் நிலையில் இருக்கும் பிரமாண்ட நட்சத்திரம் காலவெளி நேரத்தில் சிங்குலாரட்டி எனும் ஆதித் தொடக்கப் புள்ளியாக மாறும் என அவர் கூறினார். இந்தப் பிராந்தியத்தில் அடர்த்தி மற்றும் ஸ்பேஸ்டைம் வளைவு எல்லையில்லாததாக இருக்கும் என்பது இதற்குப் பொருள். இந்த நிகழ்வே கருந்துளை எனக் குறிப்பிடப்படுகிறது. அறிவியல் ஆய்வில் ஹாக்கிங்கின் முதல் முக்கியப் பங்களிப்பாக இது அமைந்தது.

தொடர்ந்து அவர் கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி விளக்கும் பல முக்கியக் கருத்தாக்கங்களை வெளியிட்டார். அவரது கருத்துகளில் ஒரு சில சர்ச்சைக்குரியதாகவும் இருந்தன. குறிப்பாக கருந்துளைகள் வெப்பத்தைக் கதிர் வீச்சாக வெளியிடுகின்றன எனும் அவரது கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கருந்துளை ஆவியாக முடியும் என்றால் அதில் உள்ள தகவல்கள் எல்லாம் மீட்டெடுக்க முடியாத வகையில் காணாமல் போய்விடும் என்றார். இது அறிவியலுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்பட்டது. பின்னர் இந்தக் கருத்தை அவர் மாற்றிக்கொண்டார்.

1980களில் அவர் நடத்திய ஆய்வுகள், பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய முக்கியப் புரிதலை அளித்தன. பருப்பொருள்கள் பரவியிருக்கும் விதத்தில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றம் பிரபஞ்சத்தில் கேலக்ஸிகள் விரிவாக்கத்துக்கான ஆற்றலாக அமையும் என அவர் கூறினார். இந்தச் சிறிய அலைகளில்தான் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் உயிர் தோன்றலுக்கான விதை இருப்பதாக அவர் கூறினார்.

நட்சத்திர விஞ்ஞானி

1988ஆம் ஆண்டு தனது அறிவியல் கோட்பாடுகளை விளக்கிக் கூறும் வகையில், காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். காலம், வெளி, பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றி எல்லாம் சுவாரஸ்யமாக விவரித்த இந்த விஞ்ஞான நூல் சிக்கலான விஷயங்களைக் கொண்டிருந்தாலும் வெகுமக்களை மிகவும் கவர்ந்தது. இதனால் பெஸ்ட் செல்லர் பட்டியலில் சேர்ந்த இந்தப் புத்தகம் பல மாதங்களுக்கு அதே இடத்தில் நீடித்தது. ஒரு கோடிக்கும் மேல் விற்பனையான இந்தப் புத்தகம், 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகமே ஹாக்கிங்கைப் பொதுமக்கள் மத்தியில் நட்சத்திரமாக்கியது. 2014ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையை மையமாகக்கொண்டு வெளியான ‘தி தியரி ஆப் எவ்ரிதிங்’ திரைப்படம் இவரை மேலும் நெருக்கமாக அறிய வைத்தது.

வாழ்க்கைப் போராட்டம்

தனி வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும் ஹாக்கிங்கின் ஆய்வுப் பணி தொடர்ந்தது. சக்கர நாற்காலியில் உலாவந்தபடி, மென்பொருள் உதவியோடு அவர் பேட்டி அளித்ததும், மாநாடுகளில் பேசியதும் மனித முயற்சியின் உச்சமாக அவரைக் கருதவைத்தன. இதனிடையே அவர் தனது ஆய்வு எல்லைகளையும் விரிவாக்கிக்கொண்டார். செயற்கை நுண்ணறிவுத் துறையின் தாக்கம் குறித்துக் கருத்துத் தெரிவித்துவந்த ஹாக்கிங், வேறு கோள்களுக்குக் குடிபெயர்வதில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் இருப்பதாகவும் கூறிவந்தார்.

மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை, ஆனால், மரணத்துக்கு அவசரப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களால் முடியாதவை பற்றிக் கவலைப்படுவதை விட்டு, தங்களது குறையால் பாதிப்பில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியவர் அதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

ஹாங்கிங் சிந்தனைகள்

உங்களுக்குக் கால்களுக்குக் கீழ் அல்ல, வானத்து நட்சத்திரங்களை அண்ணாந்து பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• வாழ்க்கை எத்தனை மோசமானதாக இருந்தாலும் சரி, அதில் நீங்கள் செய்யக்கூடிய வெற்றி பெறக்கூடிய ஏதேனும் ஒன்று இருக்கும். வாழ்வு இருக்கும் வரை நம்பிக்கை இருக்கும்.

• என்னால் அசைய முடியாது மற்றும் கம்ப்யூட்டர் உதவியுடன் தான் பேச முடியும் என்றாலும் மனதளவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

• 21 வயதில் எனது எதிர்பார்ப்பு பூஜ்ஜியமாகிவிட்டது. அதன்பிறகு கிடைத்த எல்லாமே போனஸ்தான்.

• பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடிந்தால் அது மனித அறிவின் உச்ச வெற்றியாக இருக்கும். அப்போது நாம் கடவுகளின் மனதை அறிந்துவிடலாம்.

ஹாக்கிங் வாழ்க்கை

• 1942 - பிரிட்டனின் ஆக்ஸ்போர்டில் பிறந்தார்.

• 1959 - ஆக்ஸ்போர்டில் நேச்சுரல் சயின்ஸ் பயிலும் வாய்ப்பைப் பெற்று பின்னர் கேம்பிரிட்ஜில் பிஹெச்.டி பட்டம் பெற்றார்.

• 1963 - மோட்டார் நியூரான் எனும் உடலியக்கப் பாதிப்பு நோயால் தாக்கப்பட்டார்.

• 1974 - ஹாக்கிங் கதிரியக்கம் என அழைக்கப்படும் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

• 1979 - கேம்பிரிட்ஜில் லிகாசியன் கணிதவியல் பேராசிரியரானார்.

• 1988 - ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் புத்தகம் வெளியானது.

• 2014 - வாழ்க்கை வரலாறு படமான தி தியரி ஆப் எவ்ரிதிங் வெளியானது.

• 2018 - உலகிலிருந்து விடைபெற்றார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon