மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 மா 2018

எல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்!

எல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 17

இராமானுஜம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி தலைவராக இருந்தபோது ஒற்றுமையுடன் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். அதனால் உறுப்பினர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த முடிந்தது கே.ஆர்.ஜியால். அவருக்குப் பின் சங்கத் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களில் தலைமைக்குரிய ஆளுமைத் தன்மையுடன் செயல்பட்டவர் இராம.நாராயணன் மட்டுமே. திமுக ஆளுங்கட்சியாக இருந்ததால் இவர் சொல்வது வேதவாக்காக அமலானது. சங்க வளர்ச்சி, உறுப்பினர் நலன் என்பது கே.ஆர்.ஜியுடன் முடிந்துபோனது. நடிகர் விஷால் தலைவராக வெற்றி பெற்ற பின் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயற்சித்து வருகின்றனர். பிரதான பிரச்சினையாக உருவெடுத்திருப்பது டிஜிட்டல் திரையிடல் கட்டண உயர்வு.

இதில் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எப்போதும் இல்லாத வகையில் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் என அனைவரும் ஏகமனதாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகக் குழு குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது. தன் முன்னால் இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்கள், வெளிநாட்டு கம்பெனிகள் இவர்களை எதிர்த்து வெற்றி கொள்வதற்கான ஒருங்கிணைப்பு - ஒற்றுமையை விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல் தொழில்நுட்ப ரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வல்லுநர் குழு ஏற்படுத்தப்படவில்லை. பிரச்சினை தீவிரமடைந்த பின்பும் சங்கத் தலைவர் தலைமறைவாகவே உள்ளார்.

டிஜிட்டல் பிரச்சினையைத் திசை திருப்பவும், நீர்த்துபோகச் செய்யவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழக்கமாகக் கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சி, சக உறுப்பினர்கள் மூலம் வேறு பிரச்சினைகளைக் கிளப்பச் செய்வது போன்ற வேலைகளைக் கடந்த இரு வாரங்களாகச் செய்து வருகிறது தனக்கு விசுவாசமான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மூலம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் நடிகர்கள் சம்பள குறைப்பு, விகிதாசார முறையில் நடிகர்களுக்குச் சம்பளம் என புதுப்புது பிரச்சினைகளைக் கிளப்பி அறிக்கை வெளியிட்டுள்ளதைப் பார்க்க வேண்டியுள்ளது. ரஜினியும், கமலும் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்; அப்புறம் அரசியலுக்கு போங்கள் என்பதெல்லாம் முக்கிய பிரச்சினையைத் திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தி தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதற்கே இதுபோன்ற அறிக்கைகள் உதவும் என்கின்றனர் அக்கறையுள்ள தயாரிப்பாளர்கள்.

இதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். “இந்தத் திரைப்படத் துறையின் இன்னல்களைக் களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்குங்கள். இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என ரஜினி, கமல் இருவருக்கும் வேதனையுடன் வேண்டுகோள் வைக்கிறார்.

இதுபற்றி ஜே.சதீஷ்குமார் கூறியதாவது:

“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால், அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாகச் செய்ய ஆரம்பியுங்கள். ஆனால், அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்தத் திரையுலகத்துக்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்?” என்கிறார்.

இந்தப் போராட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் என்ன என்பது பற்றியும் வேறு பல விஷயங்கள் பற்றியும் சதீஷ்குமார் மேலும் கூறுவதைக் கேளுங்கள்...

“இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் சில விஷயங்களைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல், திரைத் துறையில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே போராட்டமாக நடத்த வேண்டும்.

சம்பளத்துக்கு உச்ச வரம்பு

நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். எந்த ஹீரோவாக இருந்தாலும் அதிகபட்சம் ரூ.2 கோடி ரூபாய்க்குள் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதன்பின் படம் ஓடுவதை வைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து அதில் அவர்களுக்கான சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது தயாரிப்பாளர்களும் நிம்மதியாகப் படம் தயாரிக்க முடியும். படம் நன்றாக ஓடும்பட்சத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவருக்குமே நல்ல லாபமும் கிடைக்கும். படம் ஓடாவிட்டாலும் அவர்களுக்குப் பெரிய நட்டமும் இல்லை.

இந்தியில் இந்த சிஸ்டம்தான் இருக்கிறது. இன்றைக்கு மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லாலின் சம்பளமே மூன்று கோடி ரூபாய்தான். ஆனால், இங்கேதான் புதிதாக ஒரே ஒரு படத்தில் நடித்தவர்கள்கூட, அடுத்த படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார்கள். அவங்க டிமாண்ட் பண்றதைக் கொடுத்து, இல்லை... நாமே அவங்கச் சம்பளத்தை ஏத்திவிட்டு, நம்ம தலையில நாமளே கொள்ளி வெச்சுக்கிறோம்.

இதேபோல இயக்குநர்களுக்கும் சம்பள விகிதம் நிர்ணயம் பண்ண வேண்டும். முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படத்துக்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். எதற்காக அவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது. 3௦ நாள்கள் வேலை செய்யுறதுக்கு இரண்டு கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச். எல்லோருக்கும் கன்னாபின்னாவெனச் சம்பளத்தை ஏற்றிவிடும் வேலையை நாம் செய்ய வேண்டாம்.

அதேபோல சாட்டிலைட் உரிமையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுங்க.

படங்களை வெளியிட ஒரு வரைமுறை

படங்களை ரிலீஸ் செய்வதில் ஒரு வரைமுறையைக் கொண்டுவர வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் இப்போது நடக்கும் போராட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்குமாகத் தனித்தனியாக ஸ்டிரைக் பண்ண வேண்டாம். இன்னொரு பக்கம் தியேட்டர்களில் நடக்கும் சில அடாவடிகளையும் நாம் கட்டுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும்.

தியேட்டர் அடாவடிகள்

இன்று தியேட்டர்களில் தண்ணீர், பாப்கார்ன், காபி உள்ளிட்ட தின்பண்டங்களை மூன்று அல்லது நான்கு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். அவற்றை எம்ஆர்பி விலைக்கே விற்க வலியுறுத்த வேண்டும். பார்க்கிங்கில் அநியாயக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இவையெல்லாம் நம் படங்களைப் பார்க்கத் தியேட்டருக்கு தேடிவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகின்றன. இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். முறைப்படுத்த வேண்டும்.

பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மல்டிபிளக்ஸ் மட்டுமல்லாது பி & சி என அனைத்துத் திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழ்ப் படங்களுக்கே முன்னுரிமை

அதேபோல தியேட்டர்களில் தமிழ்ப் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட ஆவணச் செய்ய வேண்டும். காரணம், மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலப் படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திரையிடப்படுகின்றன. இப்போதுகூட நாம் இங்கே போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் மற்ற மொழிப் படங்களைத் திரையிட்டு அதில் லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கின்றனர்.

அது மட்டுமல்ல, மற்ற மொழிப் படங்களை டப்பிங் செய்து தமிழ்ப் படம் போல திரையிடுகின்றனர். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் போல அந்தந்த மொழிப் படங்களை அந்தந்த மொழிகளிலேயே வேண்டுமானால் திரையிட்டுக் கொள்ளட்டும். பி & சி தியேட்டர்களில் இந்தப் பிரச்சினை இல்லை.. இந்த விஷயத்தில் இதுபோன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்துப் போராட வேண்டும்.

கோடையில் பிறக்கட்டும் புது உலகம்

இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்க இன்னும் ஒரு மாத கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அனைத்துக்கும் தீர்வைக் கொண்டுவந்துவிட்டு கோடை விடுமுறையிலிருந்து புதிய திரையுலகை நாம் கட்டமைத்துவிடலாம். நம்மால் முடியும். திரையுலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ள இந்தச் சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

ஒவ்வோர் ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தணும்னு கமல் சொல்றாரு. நீங்க வளர்ந்த இந்த இடத்தில் இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது.. இதை யாரு சுத்தப்படுத்துவது?

ரஜினி, கமல் ரெண்டு பேருமே நாட்டுக்கு நல்லது செய்யுங்கள். வேண்டாமெனச் சொல்லவில்லை. முதலில் நீங்கள் வளர்ந்த இடத்துக்குச் செய்ய வேண்டியது உங்கள் கடமை அல்லவா? இன்னும் இந்த பிரச்சினை குறித்து இவர்கள் இருவரும் கேள்விகூடக் கேட்கவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நீங்கள் இருவரும் குரல் கொடுத்தால் அடுத்த 5 நிமிடங்களில் முடிந்துவிடுகிற பிரச்சினை இது. தேவைப்பட்டால் க்யூப் போல புதிதாக ஒன்றைக்கூட நாம் ஆரம்பிக்க முடியும். இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள். உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயாராக இருக்கிறோம். இப்போதைய உங்கள் சேவை முதலில் கோடம்பாக்கத்துக்குத்தான் தேவை.”

இவ்வாறு தனது மனதில் உள்ள ஆதங்கம் முழுவதையும் ஒரு தயாரிப்பாளரின் மனநிலையில் இருந்து கொட்டித் தீர்த்தார் ஜே.சதீஷ்குமார்.

சேலம் சிண்டிகேட்டுகளால் சிக்கலைச் சந்தித்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள்... நாளை காலை 7 மணி பதிப்பில்.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14

பகுதி 15 பகுதி 16

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வியாழன் 15 மா 2018