மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஸ்டீபன் ஹாக்கிங் இறப்பு: தலைவர்கள் இரங்கல்!

ஸ்டீபன் ஹாக்கிங் இறப்பு: தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயற்பியல் பேராசிரியரும் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) நேற்று மரணமடைந்தார்.

அண்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபாடுகொண்ட அவர், அடுத்த 200 ஆண்டுகளில் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேற்றி வேறு கிரகத்தில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவரது இறப்பு என்பது வேற்றுக் கிரக ஆராய்ச்சியின் இழப்பாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டீபனின் இறப்புக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் முக்கியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணச் செய்தி வருத்தமாக உள்ளது. நமது உலகமும் நமது பிரபஞ்சமும் மர்மங்களை உடைய பகுதி என்பதை அவரது புத்திசாலித்தனத்தால் அறிந்துகொண்டோம். அவரது தைரியம் மற்றும் அவரது திறமை இனிவரும் தலைமுறைகளுக்கு ஓர் உத்வேகமாக இருக்கும் .

பிரதமர் மோடி: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டனர். அவரது இறப்பு வேதனையாக உள்ளது. பேராசிரியர் ஹாக்கிங்கின் பணிகள் நம் உலகத்தை ஒரு சிறந்ததாக மாற்றியது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: உடல் குறைபாடு இருந்தாலும் நவீன இயற்பியலின் முகமாக இருந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். அழிக்க முடியாத குறியீட்டை சமூகத்தின் மீது அவர் விட்டுச்சென்றுள்ளார். உலகின் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைப் போல் நானும் வருத்தமடைகிறேன். பாஜக தலைவர் அமித் ஷா: ஸ்டீபன் ஹாக்கிங் என்ற சிறந்த மேதை மற்றும் மனிதரின் இழப்பு செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். எதிர்காலத் தலைமுறையினருக்கும் மனித இனத்துக்கும் நம்பிக்கையாக இருந்தவர். பேரண்டத்தை நாம் அறிந்துகொள்வதற்கு அவர் அதிகம் பங்காற்றியுள்ளார். சந்தேகத்துக்கு இடமின்றி, ஆண்டாண்டுக்கும் அவர் எதிரொலிக்கப்படுவார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இயற்கையை வென்ற இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. அவர் வரலாறாக வாழ்வார். அறிவியலுக்காக உழைத்தது மட்டுமின்றி உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த அவருக்கு வீர வணக்கம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை ஒரு பாடம். இளைய தலைமுறை அவரைப் படிக்க வேண்டும். கடினமான இயற்பியல் கல்வியைக் கற்பிப்பதில் எளிமையாக்கித் தந்தவர். அண்டவெளி அறிவியலை எளிய மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர். ஸ்டீபன் ஹாக்கிங் படைப்புகளைத் தமிழக மாணவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: அறிவியல் சமுதாயம் என்ற அண்டத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். உலகம் இதுவரை பார்த்திராத அந்த நட்சத்திரம் நம்முடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்: ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நம்மிடையே வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில்கொள்வோம். அவர் புகழ் வாழும்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon