மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

துணை முதல்வர் உறுதிமொழி என்னாச்சு?: தமிழகத்தை நெருங்கும் நியூட்ரினோ!

துணை முதல்வர் உறுதிமொழி என்னாச்சு?: தமிழகத்தை நெருங்கும் நியூட்ரினோ!

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாகியிருக்கிறது தமிழக அரசு. இத்திட்டத்துக்காக இனியும் மக்கள் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என்றும் சிறப்புத் திட்டம் என்ற அளவில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூடி முடிவெடுத்திருக்கிறது.

சட்டத்தையும் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மக்களையும் கிஞ்சித்தும் மதிக்காமல் நியூட்ரினோ திட்டத்துக்குச் சிறப்பு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவெடுத்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

நியூட்ரினோ திட்டத்தைத் தடை செய்வதற்கு மக்கள் மன்றம் மூலம் மட்டுமல்ல; சட்ட ரீதியாகவும் முயன்றுவரும் அமைப்பு என்பதால் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கருத்து இந்த விவகாரத்தில் முக்கியமாகிறது.

இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நியூட்ரினோ திட்டத்துக்கு சலீம் அலி என்ற நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையின் அடிப்படையில்தான் 2011ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இந்த அனுமதியைப் பெற்றவுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியைப் பெறாமலே திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதை எதிர்த்து 2015ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

அதற்குப் பின்னர் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயாரித்த சலீம் அலி நிறுவனம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்பதால் இத்திட்டத்துக்கான அனுமதியைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பதில் அளித்த தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்க பல்வேறு அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவை உருவாக்கி அக்குழுவின் அறிக்கை அடிப்படையில்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி வழங்க முடியும் என தெளிவாகக் கூறியிருந்தது. இதற்கென ஆறு பேர் கொண்ட குழுவையும் அமைத்திருந்தது.

பின்னர் இந்திட்டத்துக்கான புதிய சுற்றுச்சூழல் அனுமதிகோரி 2017ஆம் ஆண்டு ‘டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்’ தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பின்னர் இந்த ஆய்வகத்தை அமைக்க மலையக் குடையும்போது சக்திவாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும்; 6 லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்படும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லூயிர் பெருக்க இடமாக உள்ளதாலும், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் வாழ்கிறது என்பதாலும், பொட்டிபுரம் மலைப்பகுதி வைகை நதியின் முக்கிய நீராதாரமாக விளங்குவதால் ஐந்து மாவட்ட நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருப்பதாலும் இத்திட்டத்துக்கு கேட்டகரி ‘பி’ அதாவது வெறும் கட்டுமானம் மட்டும் உள்ளடங்கிய திட்டமாக அனுமதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தது” என்று நியூட்ரினோ திட்டத்தின் பாதையைப் பட்டியலிட்டுள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

கடந்த மாதம் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு வருமென்றால் இந்தத் திட்டம் அனுமதிக்கப்படாது எனக் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர்,

“ஆனால், இந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி நியூட்ரினோ ஆய்வக மையம் தேச முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தைக் கூறி இதை சிறப்புத் திட்டமாகக் கருதி அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு. மேலும், இத்திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இல்லை, வெடிமருந்து பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது எனவும் கூறியுள்ளது.

சிறப்புத் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டதால் இனி புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை எனவும் கூறியுள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், தேசிய வனவிலங்குகள் நல வாரிய அனுமதியையும் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்கலாம் எனவும் கூறியுள்ளது.

இந்த முடிவை எடுத்தால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் எனக் கடந்த மாதமே சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நோட்டீஸ் விடுத்திருந்தது.

அதில் இந்தத் திட்டம் அமைவதற்குப் பல லட்சக்கணக்கான டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல லட்சம் டன் பாறைகள் உடைக்கப்படும்போது சுற்றுச்சூழலில் பெரிய தாக்கம் ஏற்படும், இப்படிப்பட்ட திட்டத்தை கட்டுமான திட்டமாகக் கருத முடியாது என்றும், இத்தகைய திட்டத்துக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் கட்டுமானத்திட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது பிழையானது என்றும் கூறியிருந்தோம்.

மேலும், இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை வழங்க நடந்த நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் இந்திய நாட்டின் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்’ DRDOவைச் சேர்ந்த நிபுணர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி என்று இதுகாலம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லிவந்த திட்டக்குழுவினரின் உண்மை நோக்கமும் இதன் மூலம் வெளிப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இப்படி தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மதிக்காது இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள இம்முடிவு மாநில சுயாட்சி உணர்வைக் கடுமையாக பாதிக்கும் என்றும், இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கையைத் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீரின் மாவட்டத்தில் மலைகளைத் துளைக்க மத்திய அரசு வருகிறது. மாநில அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon