மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

எஸ்.ராவைக் கௌரவிக்கும் வைகோ

எஸ்.ராவைக் கௌரவிக்கும் வைகோ

திராவிட இயக்கங்கள் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகளை அங்கீகரிப்பதும் விருதுகள் வழங்கி கௌரவிப்பதும் நீண்ட காலமாக நடக்காமல் இருந்தது. அதை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘இயற்றமிழ் வித்தகர்’ விருது அளிப்பதோடு பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கவிருக்கிறார்.

இந்த விருது வழங்கும் விழா மார்ச் 16ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் எஸ்.ஏ.பெருமாள் தலைமை உரையாற்றவுள்ளார். கவிஞர் தங்கம் மூர்த்தி, எழுத்தாளர் மதுரா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். விருதும், பொற்கிழியும் வழங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள் குறித்து வைகோ ஆய்வுரையை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த விருது அறிவிப்பு வெளியானது குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தனது மகிழ்ச்சியை ஸ்ருதி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். “பைந்தமிழ் மன்றம் என்கிற இலக்கிய அமைப்பைத் தமிழ் பண்பாளர் வைகோ அவர்கள் உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்பு திருநெல்வேலியை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த அமைப்பின் சிறப்பு என்னவென்றால் ஆண்டுதோறும் ஓர் இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குக் கௌரவம் கொடுத்து, அவர்களின் படைப்புகள் குறித்த ஆய்வுரையை நிகழ்த்தி, அவர்களுக்குப் பொற்கிழி வழங்கி, பெரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பாக இயற்றமிழ் வித்தகர் விருதை எனக்கு வழங்குவதாக வைகோ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த விருதை வழங்குவதாக அறிவித்ததற்கு என்னுடைய மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் வைகோவுக்கும் தனக்குமான எழுத்து சம்பந்தமான உறவைப் பகிர்ந்து கொண்டார். “விருது என்பது ஓர் எழுத்தாளனுக்குக் கிடைக்கூடிய கௌரவம், அங்கீகாரம். அவன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்குத் தரக்கூடிய உற்சாகம், உத்வேகம் என்றே நான் சொல்லுவேன். இந்த விருது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய கல்லூரி நாள்களில் தொடங்கி இப்போதுவரை நான் வைகோ அவர்களின் பேச்சைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். வைகோ மிகச் சிறந்த பண்பாளர். இலக்கியச் சொற்பொழிவாளர். தமிழர்களுக்காக, தமிழினத்துக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிற ஒரு போராளி. அவர் என்னுடைய படைப்புகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் படித்திருக்கிறார். அவ்வவ்போது புத்தகம் குறித்து உரையாடி, பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். சங்க இலக்கியம் தொட்டு நவீன இலக்கியம் வரை வாசித்து வருகிற அவர் எனக்கு இப்படி ஒரு விருதை வழங்கவிருப்பதை உண்மையில் பெருமைக்குரிய விஷயமாகவும், மிகப் பெரிய கௌரவமாகவும் கருதுகிறேன்” என்றார்.

எழுத்துலக வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கியவர், “பொதுவாக எழுத்தாளர்களைக் கௌரவிப்பது என்பது அரசியல் தளத்தில் அதுவும் அரசியல் கட்சி சார்ந்த மையங்களில் நடைபெறுவதே இல்லை. எழுத்து, இலக்கியம் எல்லாமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது என நினைக்கிறார்கள். இல்லை. அரசியலும் இலக்கியமும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டும். இலக்கியவாதிகளைக் கொண்டாட வேண்டும். இலக்கியத்தைக் கொண்டாட வேண்டும். தமிழுக்காக, தமிழர்களின் நலனுக்காக, தமிழ் இனத்துக்குரிய வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக எளிய கரிசல் பிரதேசத்துக்குரிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறவன் என்கிற முறையில் என்னையும் என் எழுத்தையும் நேசித்து அதற்கு ஒரு பெரிய அங்கீகாரம் தரக்கூடிய வைகோ அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon