மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்: வழக்கு பதிவு செய்யலாம்!

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்: வழக்கு பதிவு செய்யலாம்!

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு, குற்றத்துக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த கே.ஆறுமுகம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நான், தெற்கு ரயில்வே ஊழியராகப் பணிபுரிந்து வருகிறேன். ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் வசித்து வரும் சத்திய நாராயணராவ் என்பவருக்கு நான் ஜாமீன் அளித்துள்ளதாகவும் எனவே கடன் தொகையை வட்டியுடன் நான் செலுத்த வேண்டுமென்றும் கூறி ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து கடந்த 5.4.12 அன்று நோட்டீஸ் வந்தது.

சத்திய நாராயணராவ் யார் என்றே எனக்குத் தெரியாது என்பதால் தவறுதலாக அனுப்பியுள்ளார்கள் என நினைத்து பதில் அளிக்காமல் விட்டுவிட்டேன். அதன்பிறகு மீண்டும் 7.5.12 அன்று எனக்கு ஆர்பிட்ரேட்டர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வந்தது. என்னைப் போல வேறு சில ரயில்வே ஊழியர்களுக்கும் இதுபோல நோட்டீஸ் வந்தது.

ரயில்வே பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க சென்றதால் விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியவில்லை. இதற்கிடையே ரூ.6 லட்சத்தை நான் உள்ளிட்ட ஜாமீ்ன்தாரர்கள் சேர்ந்து செலுத்த வேண்டுமென நோட்டீஸ் வந்தது.

இதுதொடர்பாக ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸில் விசாரித்தபோது, எங்களது சம்பள பில் மற்றும் இதர ஆவணங்களைப் பயன்படுத்தி ஜாமீன்தாரர்களாகக் கையெழுத்தைப் போலியாக போட்டு விஜயகுமார் என்பவர், அந்த நிதி நிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

ஏற்கெனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறியதால், விஜயகுமார் எங்களது சம்பள பில் போன்றவற்றை கொடுத்து இருந்தோம். ஆவணங்களைப் பயன்படுத்தி ஜாமீ்ன்தாரர்கள் என போலியாகக் கையெழுத்துப்போட்டு மோசடி செய்த விஜயகுமார் மற்றும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அதன் பேரில் ஜாம்பஜார் போலீஸார் அவர்களை அழைத்து எனக்கு எதிரான நடவடிக்கையை கைவிட அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சென்னை 10ஆவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு சம்மன் வந்தது. அதில், கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் மூலமாக கடன் பெற சரவணன் என்பவருக்கு நான் ஜாமீன் கொடுத்துள்ளதாகவும், ஆகவே வட்டியும், முதலுமாக சேர்த்து ரூ.15.46 லட்சத்தை செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இந்தக் கடனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக கடந்த 7.12.17 அன்று மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்த புகார் ஓட்டேரி காவல் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுநாள் வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று (மார்ச் 14) விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘மனுதாரர் அளித்த புகாரில் உரிய முகாந்திரம் இருந்தால் ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon