மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: செங்கடலால் சூழ்ந்த மும்பை!

சிறப்புக் கட்டுரை: செங்கடலால் சூழ்ந்த மும்பை!

ஸ்ரீராம் அய்யர்

நாடே திரும்பி பார்க்கும் வகையில், செங்கொடிகள் சூழ மாபெரும் பிரமாண்டமான ஒரு பேரணியை மகாராஷ்டிர விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நடத்தி முடித்துள்ளனர். வேளாண் கடன் ரத்து, வனப்பகுதியில் உள்ள பழங்குடியினரின் நிலங்களை அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புனேவிலிருந்து மும்பை வரை நடந்தே சென்று மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர் விவசாயிகள். மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய இந்தப் பிரமாண்ட பேரணி மார்ச் 11 அன்று மும்பை நகர எல்லையை வந்தடைந்தது.

180 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இந்தப் போராட்டம் விவசாயிகளின் உணர்வுகளையும், அவர்களது கோரிக்கைகளின் நியாயத்தையும் பிரதிபலித்தது. மேலும் அதையும் தாண்டி ஆளும் அரசுக்கு எதிரான விவசாயிகளின் மனநிலையை வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. புனேவில் பேரணி தொடங்கியபோது 35,000 பேராக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 180 கிலோமீட்டர் கடந்து மும்பையை வந்தடையும்போது விவசாயிகளின் எண்ணிக்கை 50,000ஆக அதிகரித்துவிட்டது. மும்பையைப் பேரணி வந்தடைந்தபோது பகல் நேரம். மேலும், மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் காலை போக்குவரத்து நெரிசல் தீரும் வரை காத்திருந்து மதிய வேளையில் பேரணியை விவசாயிகள் மீண்டும் தொடர்ந்தனர். பெரும்பாலான வட இந்தியப் பத்திரிகைகள் இந்தப் பேரணியை செங்கடல் என்றே பதிவிட்டன. மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாததே விவசாயிகளின் இத்தகைய பெரும் கொந்தளிப்புக்கு அடிப்படை காரணமாக உள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு மும்பை வாழ் மக்கள் அளித்திருந்த ஆதரவும், உபசரிப்பும் விவசாயிகளின் போராட்டத்துக்கு கூடுதல் வலுவமைத்தது. பேரணியில் வந்துகொண்டிருந்த விவசாயிகளுக்கு மும்பைவாழ் மக்கள் உணவு, குடிநீர், ரொட்டிகள், பழங்கள் உள்ளிட்டப் பொருள்களை வழங்கி வரவேற்பளித்துள்ளனர். 180 கிலோமீட்டர் கடந்து வந்திருந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட தளர்வுகளுக்கு ஆங்காங்கே மருத்துவர்கள் இலவசமாக மருத்துவம் பார்த்து அவர்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான அகில இந்திய கிஷான் சபா (ஏ.ஐ.கே.எஸ்) ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகளின் இந்தப் பேரணிக்கு மகாராஷ்டிராவின் காங்கிரஸ், சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.

பழங்குடியின விவசாயிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். அதைப்போலவே நிலமுடைய விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற விவசாயக் கூலிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கெடுத்த சில விவசாயிகளிடம் குவார்ட்ஸ் ஆங்கில ஊடகம் நேர்காணல் கண்டுள்ளது. அதைக் காண்போம்.

ராம்தாஸ் கண்குர்த்தே: (நாசிக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்குர்த்தே கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி)

மும்பை அசாத் மைதானத்தில் இருந்த கண்குர்த்தே மிகவும் குறைவாகத் தான் பேசினார். இவருடைய பேச்சில் எந்த ஆரவாரமோ அல்லது பதற்றமோ இல்லை. ஊடகங்களின் மீதான எந்தவிதமான ஈர்ப்பும் இவரிடம் காணப்படவில்லை. இவருக்கு ரூ.70,000 கடன் உள்ளது. கடனைத் திருப்பி செலுத்துமளவுக்கு உற்பத்தியில் போதுமான வருவாய் இவருக்கு கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்த கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் மகாராஷ்டிர மாநில பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் வன நிலத்துக்கும் சட்டபூர்வமான உரிமைகள் எதுவும் கிடைக்கப்படவில்லை.

இந்த மூன்று ஏக்கர் நிலத்துக்கான சட்டபூர்வ அனுமதி கிடைத்தால் அந்த நிலத்தில் தக்காளி, மிளகாய், அரிசி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வேன் என்று அவர் கூறுகிறார். தற்போதைய நிலையில் வேளாண் உற்பத்தியின் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை ராம்தாஸ் ஈட்டுகிறார். அதே சமயத்தில் ஆண்டொன்றுக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை உள்ளூர் கூட்டுறவு சங்கங்களிடம் கடன் பெறுவதாகவும் கூறுகிறார். இவருடைய குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். இவரால் கடன் சுமையிலிருந்து மீண்டுவரவே இயலாமல் தொடர்ச்சியாக கடன் வலையில் சிக்கியிருப்பதாகவும் வருந்துகிறார்.

கம்ளிபாய் கதாளி: (நாசிக்கிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பங்கர்பாரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி)

கதாளியின் கணவர் நோய்வாய்ப்பட்டுள்ள முதியவராவர். இவர்களுக்கு 32 வயதிலும், 27 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களும் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். இவர்களுக்குத் தினசரி ஊதியம் 60 ரூபாய் மட்டுமே. இவர்களுக்கு வருடம் முழுவதும் வேளாண் பணிகள் கிடைப்பதும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வேலையில்லாத நிலை ஏற்படுவதாக கம்ளிபாய் வருத்தப்படுகிறார். எப்போதாவது கிடைக்கும் வேலைவாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதற்காக தனது மகன்கள் இருவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் கம்ளிபாய். இவரும் தன்னால் இயன்ற அளவுக்கு வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய முதன்மையான கோரிக்கை என்னவென்றால், ‘சஞ்சய் காந்தி நிராதார் அணுதான் ஜோஜனா திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகையை 600 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்’ என்பதுதான். இந்தத் திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், பெரும் நோய்வாய்ப்பட்டோர், விதவைத் தாய்மார்கள், வருடத்துக்கு ரூ.21,000க்கும் குறைவான வருவாய் ஈட்டுவோர் ஆகியோருக்கு 600 ரூபாயை மாதாந்திர உதவித்தொகையாக மாநில அரசாங்கம் வழங்கி வருகிறது.

எம்.எஸ்.புஷாரே: (நாசிக்கிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கும்பாலே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி)

புஷாரேவுடைய தந்தை மூன்று ஏக்கர் வன நிலத்தில் சாகுபடி செய்து வந்தவர். இப்போது அவர் உயிரோடு இல்லை. புஷாரேவும் அந்த நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். ஆனால், அதற்கான மிகுந்த போராட்டத்தையும் சந்தித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து உள்ளூரளவில் செயல்பட்டு வருகிறார். இவருடைய பிரச்சினைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி வருகிறது. இந்தக் கட்சியின் ஜீவா பாண்டு காவித் என்பவரைத் தொடர்ந்து ஏழாவது முறையாக அந்தப் பகுதியில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேலாகியும் புஷாரேவின் கோரிக்கைகளும் கனவுகளும் இன்னும் முழுதாக நிறைவேறவில்லை. 65 வயதான போராளியாக இன்னும் தனது உரிமைகளுக்காக அவர் போராடிக் கொண்டுள்ளார். இவர் மிகவும் உறுதியாகவும், துணிவோடும் பேசினார். இவருடைய இரண்டு மகன்களும் நாசிக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இவர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

விஷ்ணு மற்றும் நிவ்ரிதி பவார்: (நாசிக்கில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்கர்பாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்)

வன நிலத்தில்தான் பவாரும் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். விஷ்ணு மற்றும் பவார் இருவரும் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள். விஷ்ணுவுக்கு மூன்று குழந்தைகளும், நிவ்ரிதி பவாருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக இவர்களுடைய நிலங்களின் உரிமைகளுக்காகப் போராடி மறுக்கப்பட்டு வருவதாக இருவரும் கூறுகின்றனர். இன்னும் ஆறுமாத காலத்துக்குள் எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசைக் கவிழ்ப்பதுதான் எங்களுடைய அடுத்த போராட்டமாக இருக்கும் என்கிறார் நிவ்ரிதி.

ரதன்மாஞ்சி காங்குர்த்தே: (நாசிக்கிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹாத்கேடைச் சேர்ந்த விவசாயி, இவருக்கு வயது 64)

‘நிலமும் இல்லை, கடனும் இல்லை’ என்று கோபம் கலந்து சிரிக்கிறார் ரதன்மாஞ்சி. இவருடைய இரண்டு ஏக்கர் நிலமும் போதிய தண்ணீரின்றி வறண்டுவிட்டது. ஆனால், நிலம் இவருடைய பெயரில் இல்லாததால் பாசன வசதிக்காகக் கடன் பெற முடியாமல் தவிக்கிறார். வேளாண் தினக்கூலியாகச் சென்று சமாளித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்துவைக்க சேமிப்பில் இருந்த 30,000 ரூபாயை இவர் செலவு செய்துள்ளார். இவருடைய மகன் திராட்சை தோட்டத்துக்கு 60 ரூபாய் கூலிக்கு வேலைக்குச் செல்கிறார். இவருடைய அப்பா காலத்தில் இருந்து விவசாயம் மேற்கொண்டு வந்த இரண்டு ஏக்கர் நிலத்துக்கான சட்டபூர்வ உரிமைகள் வேண்டுமென இந்தப் போராட்டத்தில் இவர் பங்கெடுத்துள்ளார். நிலம் இவருடைய பெயருக்கு மாறினால் கடன் வாங்கி கிணறு தோண்ட திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறாக இந்த மாபெரும் பேரணியில் பங்கெடுத்திருந்த ஒவ்வொருவரும் தனக்கான நீதி வேண்டி, வாழ்வாதாரம் வேண்டி இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டக்குழு திட்டமிட்டபடி சுமார் 50,000 பேருடன் மார்ச் 12 அன்று மகாராஷ்டிரச் சட்டப்பேரவையை முற்றுகையிட்டது. பேரணியின் முடிவில் விவசாயிகள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் திரண்டனர். இதன் பிறகு போராட்டக் குழுவை ஒருங்கிணைத்த விவசாயிகள் சங்கத் தலைவர் அஜித் நாவலே மற்றும் ஜீவா பாண்டு காவித் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாநில முதல்வர் தேவேந்திர பாட்நாவிஸைச் சந்தித்து பேசினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சட்டப் பேரவையிலும் குரல் ஒலித்தது. அன்றைய தினமே நண்பகலுக்குப் பின் விவசாயிகளின் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அம்மாநில அரசு பணிந்தது. முக்கியமாக வனப்பகுதிகளில் விவசாயிகளின் நிலத்தை அவர்களுக்கே அளிக்க சிறப்புக் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தது. இந்திய துணைக்கண்டம் கண்ட பெரும் விவசாயப் போராட்டங்களில் ஒன்றாக இதுவும் பதிவாகியுள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா அல்லது மீண்டும் போராட்டம் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: குவார்ட்ஸ்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon