மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வேலைநிறுத்தம்: பிளவுபடும் திரையரங்க உரிமையாளர்கள்!

வேலைநிறுத்தம்: பிளவுபடும் திரையரங்க உரிமையாளர்கள்!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் படங்களைத் திரையிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8ஆம் தேதி சென்னையில் திருப்பூர் சுப்பிரமணி தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் 8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும், பெரிய திரையரங்குகளில் சீட் குறைக்க உடனடியாக அனுமதி தர வேண்டும், தியேட்டர் லைசென்ஸ் மூன்று வருடத்துக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணமாக A/C திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாயும், Non A/C திரையரங்குகளில் 3 ரூபாயும் பிடித்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு ஏற்கெனவே தமிழக அரசு ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இல்லையேல் மார்ச் 16ஆம் தேதி முதல் எந்தப் படங்களையும் திரையிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இதனால் நாளை (மார்ச் 16) முதல் திரையரங்குகள் மூடப்படும் சூழல் உருவானது. இந்த நிலையில் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 147 திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

“தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த முடிவின்படி மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட மாட்டோம். ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழி படமாக இருந்தாலும் பொது மக்களின் பொழுது போக்குக்காகத் திரையிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்” என்று சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டம் யார் தலைமையில் எங்கு நடந்தது என்பது போன்ற எந்த விவரங்களும் இன்றி பத்திரிகை தொடர்பாளர் விஜய முரளி ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அபிராமி ராமநாதனின் இந்த அறிவிப்பு வேலைநிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon