மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சீனாவில் கான் - போர்: யாருக்கு நல்லது?

சிறப்புக் கட்டுரை: சீனாவில் கான் - போர்: யாருக்கு நல்லது?

சிவா

இந்திய சினிமாவுடன் நல்லதொரு பிசினஸைத் தொடங்கியிருக்கிறது சீனா. குறிப்பாக, பாலிவுட்டிலிருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கு நான்காயிரம் ஸ்கிரீன்கள் வரை கொடுத்து அவற்றைக் கோடிகளில் மூழ்கடிக்கிறது. இந்தியாவிலிருந்து பார்க்கும்போது இந்தத் தகவல் மிகப் பெரியதாக இருந்தாலும், சீனா தனது மொத்தத் திரையரங்கில் 10 சதவிகிதத்தை மட்டுமே இந்தியத் திரைப்படங்களுக்குத் தருகிறது. இந்தப் பத்து சதவிகிதத்துக்குள் ரிலீஸானாலும் நூறு கோடி முதல் ஆயிரம் கோடி வரை வசூல் செய்து, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகின்றன அங்கு ரிலீஸாகும் இந்தியப் படங்கள். இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் திரைப்படம், சல்மான் கான் நடிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான பஜ்ராங்கி பாய்ஜான்.

சீனாவின் E Stars Films Ltd நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கான் வென்சர்ஸ் வெளியிட்ட பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்படம் சீனாவிலுள்ள எட்டாயிரம் ஸ்கிரீன்களில் ரிலீஸானது. வழக்கமாக இந்தியப் படங்களுக்குக் கொடுக்கப்படும் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரையிலேயே இருக்கும். ஆனால், சீன நிறுவனத்துடன் கைகோர்த்ததாலும், இதற்கு முன்பு வெளியான இந்தியப் படங்களில் பல நல்ல வசூலைக் கொடுத்ததாலும் சல்மான் கான் படத்துக்கு எட்டாயிரம் ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டன. இத்தனை ஸ்கிரீன்களில் வெளியான இந்தப்படம் முதல் நாள் மட்டும் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்செய்தது. முதல் வார முடிவில் 117 கோடியே 49 லட்சம் ரூபாய் வசூல்செய்து, 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ரிலீஸானபோது வசூல் செய்த மொத்தத் தொகையில் (320 கோடி) மூன்றில் ஒரு பாகத்தை சீனாவில் சம்பாதித்திருக்கிறது.

தங்கல் திரைப்படம் 1200 கோடிக்கும் மேலாக வசூல் செய்ததும் ஆமிர் கானுக்கு மட்டும் சொந்தம் எனப்பட்ட சீனத் திரையுலகத்தில், சல்மான் கானின் தற்போதைய வசூல் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன மக்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்படும் பாலிவுட் திரைப்படங்கள், இனி சீனாவிலும் ரிலீஸ் செய்யப்படும் நிலையை கான் நடிகர்களின் வெற்றி தொடங்கிவைத்திருக்கிறது. இதுவரை பாலிவுட்டில் மட்டும் நிகழ்ந்துவந்த இவர்களது போட்டி சீனா வரையிலும் தொடரப்போகிறது. ஆனால் ஒரு இந்தியத் திரைப்படம், இங்கு வசூல் செய்ததைவிட அயல்நாட்டில் அதிக வசூல் செய்வது எப்படி என்கிற கேள்வி மேற்கண்ட கான் நடிகர்களின் வெற்றியிலிருந்து எழுகிறது.

இதற்கு ஒரே காரணம் டிக்கெட் விலை. இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீன நாட்டில் ஒரு டிக்கெட்டின் விலை அதிகம். இங்கு 100 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் சீனாவில் 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 8 மடங்கு அதிகமான விற்பனையை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் பெற்ற வெற்றியில் நான்கில் ஒரு பங்குகூட சல்மான் கானின் பஜ்ராங்கி பாய்ஜான் திரைப்படம் சம்பாதிக்கவில்லை. ஆனால், அதிக டிக்கெட் விலையின் காரணமாக ஒரே வாரத்தில் 117 கோடி என்பதை இந்தியத் திரையுலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. சீனாவில் நடைமுறையிலுள்ள டிக்கெட் விலையை, இந்தியாவில் நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், சீன மக்களை தியேட்டருக்கு வரவழைக்க அந்நாட்டின் சினிமா நிறுவனங்கள் எடுத்த முயற்சிகளை இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. சீனாவில் இயங்கும் தியேட்டர்கள் அனைத்திலும், எந்த முறையில் டிக்கெட் வாங்கப்பட்டிருந்தாலும் தள்ளுபடி, கூப்பன், டிக்கெட் வாங்கியதற்கான பாய்ண்டுகள் என டிக்கெட் விலையின் மூன்றில் ஒரு பங்கு பணத்தை அந்நாட்டின் திரைத்துறையுடன் இணைந்துள்ள வணிக நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒருவர் சினிமா பார்ப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை, சினிமா ரசிகர்களுக்கே திருப்பிக் கொடுப்பதன் மூலம், ஒருமுறை லாபமாக மாறிய பணம் யாருடைய லாக்கருக்கும் செல்லாமல், திரையுலகுக்கும் ரசிகனுக்கும் இடையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் என்ன நடைபெறுகிறது? சினிமா பார்க்கச் செல்லும் ரசிகனிடமிருந்து ஒரு வழிப் பாதை போலப் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கின்றன சினிமாவுடன் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள்.

சீனாவுக்குச் சென்று நூறு கோடிகளாக கான்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வருவதினால், இந்திய சினிமாவுக்கும், இந்திய சினிமா ரசிகர்களுக்கும் எவ்வித லாபமும் இல்லை. புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘சீன மோகம்’, ஒரு காலத்தில் சீன மொபைல்கள் இந்திய மொபைல் சந்தையை ஆட்கொண்டது போல உள்நுழைந்திருக்கிறது. சீனாவுக்கு ஏற்ப திரைப்படங்கள் எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், நட்சத்திர நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் சினிமாவை வளர்க்க நினைக்கும் இளம் சக்திகள் வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon