மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வெற்றிக்கு உதவிய இளம் வீரர்கள்!

வெற்றிக்கு உதவிய இளம் வீரர்கள்!

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று (மார்ச் 14) நடைபெற்ற டி-20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி-20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேச அணிகள் பலபரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் வங்கதேச அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பெரிதளவில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 27 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மாவும் (89) கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்திருந்தது. நேற்று போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் கடைசியாக இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 215 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக 177 ரன்களை இலக்காக கொடுத்த இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமது சிராஜ் தொடக்கம் முதல் வங்கதேச வீரர்கள் ரன் சேர்க்க உதவினார். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஹல் இருவரும் சிறப்பாகப் பந்து வீசி வங்கதேச அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். வங்கதேச அணியின் முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளை சுந்தர் கைப்பற்றினார். எனவே, அந்த அணி வீரர்கள் சற்றே தடுமாறத் தொடங்கினர். இருப்பினும் அந்த அணியின் அனுபவ வீரர் முஸ்தஃபிசூர் ரஹீம் சிறப்பாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும் ரஹீம் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 18 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய வங்கதேச அணிக்கு சிராஜ் வீசிய 18ஆவது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. எனவே 12 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையை அந்த அணி எட்டியது.

அப்போது 19ஆவது ஓவரைச் சிறப்பாக வீசிய தாகூர் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றியைக் கிட்டத்தட்ட உறுதி செய்தார். கடைசி ஓவரில் 28 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியால் 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. எனவே, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹீம் 72 ரன்களைச் சேர்த்தார். இதுவே இந்திய அணிக்கு எதிராக டி-20ல் வங்கதேச அணி வீரரின் அதிகபட்சமாகும். இந்திய அணியன் இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாகூர் இருவரும் சிறப்பாகப் பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon