மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 மா 2018

நேபாள விமான விபத்து: யார் மீது தவறு?

நேபாள விமான விபத்து: யார் மீது தவறு?

திங்கட்கிழமை (மார்ச் 12) நேபாளத்துக்கு வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். கடந்த பல ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

வங்க தேசத் தலைநகர் டாக்காவிலிருந்து நேபாளத்துக்கு வந்த பயணிகள் விமானத்தில் 67 பயணிகள், 4 விமானப் பணிக் குழுவினர் என 71 பேர் பயணம் செய்தனர். இதில், 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதிலும் ஒரு சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணித்து உயிர் தப்பித்த வங்கதேசத்தை சேர்ந்த ஷார்னா ஹாகேன், “விபத்தில் ஏற்பட்ட புகையை அதிகளவில் நான் சுவாசித்தால், உயிர் பிழைக்க மாட்டேன் என நினைத்தேன். ஆனாலும், சாகவும் எனக்கு விருப்பம் இல்லை. என்னால் சீட்டில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. எனது கணவர் என்னை இழுத்து வெளியே கொண்டு வந்தார். அடுத்த சில மணி துளிகளிலேயே விமானம் வெடித்து தீக்கு இரையானது. என் கணவர்தான் என்னைக் காப்பாற்றினார். ஆனால், என் மைத்துனர் இதில் இறந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விமானம் தரையிறங்கும்போது கட்டுபாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது.

உண்மையில் இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும்போது, விமான ஓட்டி அறைக்கும், கட்டுபாட்டுக்கு அறைக்கும் இடையில் நடைபெற்ற இறுதி உரையாடலில் விமானம் இறங்க வேண்டிய ஓடுபாதை பற்றி நிலவிய குழப்பமே விபத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

கடைசி நான்கு நிமிடங்கள்

பாம்பார்டியர் டாஸ் 8 கியூ400 என்ற வகையைச் சேர்ந்த விமானம் வங்கதேசத் தலைநகரான டாக்காவிலிருந்து காத்மண்டு நகருக்கு யூஎஸ்-பங்களா என்ற வங்கதேச நிறுவனத்தால் இயக்கப்பட்டது. விமான ஓடுதளத்தின் தெற்குப் பகுதியிலிருந்து தரையிறங்க வேண்டிய விமானம், வடக்குப் பகுதியிலிருந்து தரையிறங்கியது. விமானிகள் அறையான காக்பிட்டிலிருந்து கட்டுப்பாட்டு அறையுடன் முதலில் பெண் விமானிதான் பேசியுள்ளார். தரையிறங்கும் நேரத்தில் ஆண் விமானி பேசியிருக்கிறார். விமானிக்கும், விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கும் நடைபெற்ற உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 20 ஆம் ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டாம், ஏனெனில், அங்கு வேறொரு விமானம் தரையிறங்க உள்ளது எனக் கட்டுபாடு அறை தெரிவித்துள்ளது.

பின்பு, 02ஆம் (தெற்குப் பகுதி) ஓடுதளத்தில் தரையிறங்க விருப்பமா, அல்லது 20 (வடக்கு முடிவு) ஆம் ஓடுதளத்தில் தரையிறங்க விருப்பமா என விமான நிலையக் கட்டுபாடு அதிகாரி கேட்டுள்ளார். அதற்கு, விமானி, 20 ஆம் ஓடுதளத்தில் தரையிறங்க விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஓடுதளம் தெளிவாகத் தெரிகிறதா என்ற கேள்விக்கு விமானி தெளிவாக இல்லை என பதிலளித்துள்ளார். வலது புறமாகத் திரும்பச் சொல்லி அதிகாரி கட்டளையிட்டபோது, ஓடுபாதை தற்போது தெளிவாகத் தெரிகிறது என விமானி கூறியுள்ளார். 02ஆம் ஓடுபாதையில் தரையிறங்கத் தயாராக இருப்பதாக விமானி தெரிவித்துள்ளார். இதற்கும், அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 20 ஆம் எண் ஓடுபாதையில் தரையிறங்க முன்னதாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இப்போது அது 02ஆக மாறிவிட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருப்பவரும் இதுபற்றிக் கேள்வி எழுப்பவில்லை.

சிறிது நிமிட அமைதிக்கு பிறகு, சிறிது நேரத்தில் ஃபயர் ஒன் ஸ்டேஷனிலிருந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கட்டுபாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானில் சிறிது நேரம் சுற்றிய விமானம் வடக்கு பகுதியில் (20ஆம் ஓடுபாதை) தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழுவை நேபாள அரசு நியமித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட உரையாடலின் குழப்பமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், விமானக் கோளாறு ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

யூஎஸ்-பங்களா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இம்ரான் ஆசிப் விமான கட்டுபாட்டு அறையைக் குறை கூறுகிறார். “அதுவே சொதப்பியுள்ளது. எங்களது விமானி திறமையானவர். 5000 மணி நேரப் பயண அனுபவம் கொண்டவர். கட்டுப்பாட்டு அறையில்தான் பிரச்சினை” எனத் தெரிவித்துள்ளார். விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை, விமானி கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறுகிறது.

நேபாளத்தின் ஏர்வேஸ் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என அறியப்படுகிறது. மிகவும் பிஸியாக இருக்கும் விமான நிலையமாக இருந்தாலும், பயணிகளைக் கையாள்வதில் மிகவும் மோசமாக இருக்கிறது. இருப்பினும் அது ஒரு அபாயகரமான விமான நிலையமாகக் கருதப்படுவதில்லை.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 15 மா 2018