மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: ரஷ்யாவுக்குப் பிரிட்டன் கெடு!

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: ரஷ்யாவுக்குப் பிரிட்டன் கெடு!

முன்னாள் ரஷ்ய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு எனத் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டைச் சேர்ந்த 23 தூதரக அதிகாரிகளை பிரிட்டனை விட்டு வெளியேறும்படி கெடு விதித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010ஆம் ஆண்டு பிரிட்டன் மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வெளியே செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பிரிட்டன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் எனக் கூறப்பட்டது. அவ்வாறு ரஷ்யாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரிட்டன் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பாக விளக்கமளிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து பிரிட்டனில் உள்ள 23 தூதரக அதிகாரிகளை ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என தெரேசா மே நேற்று (மார்ச் 14) உத்தரவிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுடனான உயர் மட்ட உறவுகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஐநா கூட்டத்துக்கும் பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. பிரிட்டனுக்கு ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரிட்டனின் இந்த நடவடிக்கை “ஏற்கமுடியாதது, நியாயமற்றது குறுகிய பார்வை உடையதுமாக உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon