மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

விபத்து இறப்புகளைக் குறைக்கும் ஒப்பந்தம்!

விபத்து இறப்புகளைக் குறைக்கும் ஒப்பந்தம்!

சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய வணிகத் துறை பிரதிநிதி லியோனி முல்டூனை நேற்று (மார்ச் 14) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.

டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனை மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மருத்துவமனையின் நடைமுறைகளைப் பின்பற்றி, தற்போது தமிழகத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டுவருகிறது. இந்தச் சிறப்பு பிரிவு சுகாதாரத் துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது.

மேலும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மார்க் பிட்ஜெரால்டுடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசு, விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில், ஆஸ்திரேலியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதிநிதி லியோனி முல்டூனுடன் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை மார்க் பிட்ஜெரால்ட் ஆய்வு செய்திருந்தார்.

"ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன், தமிழக அரசு மருத்துவமனைகளில் காயத்தின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் வகையில், விபத்து சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை இன்னும் 3 ஆண்டுகளில் ஏற்படுத்தத் திட்டமிட வேண்டும். இதனால் உயிரிழப்புகள் குறையும். இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும்" என்று மார்க் பிட்ஜெரால்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon