மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கட்சி முதல் கமல் கட்சி வரை...

டிஜிட்டல் திண்ணை:  எதிர்க்கட்சி முதல் கமல் கட்சி வரை...

எதிரிகளை வளைக்கும் எடப்பாடி!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “என்னிடம் 4 மெசேஜ்கள் தயாராக இருக்கின்றன. ஒவ்வொன்றாக அனுப்புகிறேன்!” என்ற மெசேஜை முதலில் அனுப்பியது.

“ஆகட்டும்!” என ஃபேஸ்புக் கமெண்ட் போட, முதல் மெசேஜ் வந்து விழுந்தது. “பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கக் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என நேற்று மாலைதான் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் கருப்புச் சட்டையைத் தேடியிருக்கிறார்கள். சிலருக்குக் கிடைத்திருக்கிறது. அதை எடுத்து அவசர அவசரமாகத் துவைத்துக் காய வைத்து அயர்ன் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில எம்.எல்.ஏக்கள் ஷோரூமுக்குப் போய் புதிய சட்டை வாங்கியிருக்கிறார்கள்.

வெளியூரிலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டதும், ‘வீட்டுல இருந்து கிளம்பிட்டோம். முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?’ என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். ‘போற வழியில எதாவது ரெடிமேட் ஷோரூம் பார்த்து வண்டியை நிறுத்துப்பா...’ என்று சொல்லி சில எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை வாங்கியிருக்கிறார்கள். அதிலும் சில கடைகளில், சார் கருப்புல நிறைய கலர் இருக்கு. யானை கருப்பு, ப்ளூ கருப்பு, டார்க் கருப்பு...’ கடைக்காரர்களும் தங்கள் பங்குக்கு குழப்ப... ‘பார்த்தா கருப்பா தெரியணும். அப்படி ஒரு கருப்பை கொடு...’ என்று கடுப்புடன் கேட்டு வாங்கியிருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ. இப்படித்தான் இரவோடு இரவாகக் கருப்புச் சட்டை தயாராகியிருக்கிறது. இன்று சட்டமன்றத்துக்கு வந்தபோது, ‘நீங்க எங்கே வாங்கினீங்க..’ என எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் கருப்பு சட்டை பற்றி விசாரித்துக்கொண்டனர். ஸ்டாலின் அணிந்திருந்த கருப்புச் சட்டையை நேற்று இரவுதான் அவரது மருமகன் சபரீசன் வாங்கி வந்திருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“கருப்புக்குப் பின்னால் இவ்வளவு கதை இருக்கா? சரி அடுத்த மெசேஜ்?” என்று கேள்வியைப் போட்டது ஃபேஸ்புக். சட்டென்று வந்து விழுந்தது இரண்டாவது மெசேஜ்.

“ஆளுங்கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் பற்றிய முழு விவரங்களையும் திரட்ட ஆரம்பித்துள்ளது உளவுத் துறை. ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் நிர்வாகிகளுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன, எங்கே புதிதாகச் சொத்துக்கள் வாங்கியிருக்கிறார்கள், எந்த வீடுகளுக்கு அடிக்கடி போய் வருகிறார்கள் என ஏ டு இசட் எல்லா விவரங்களும் தேவை என அரசுத் தரப்பிலிருந்து கேட்டார்களாம். தமிழகம் முழுக்க இந்தப் புலனாய்வு வேலையில் தீவிரமாகியிருக்கிறது உளவுத் துறை. அதிமுக தவிர்த்து, திமுக, தினகரன் அணி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பாமக என யாரையும் இந்த கண்காணிப்பு விவர சேகரிப்பில் விட்டுவைக்க வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த டேட்டா ஒட்டுமொத்தமாக கைக்கு வந்தால், நினைத்ததைச் செய்யலாம் என அரசு நினைக்கிறது என்று சொல்கிறார்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.

“சரி... மூன்றாவது மெசேஜ்?” இது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் கேட்டு முடிக்கும் முன்பு அது வந்து விழுந்தது.

”ரஜினி, கமல் கட்சிக்கு யாரெல்லாம் போக வாய்ப்பு இருக்கிறது என அரசுத் தரப்பிலிருந்து துருவப்படுகிறது. மாவட்ட வாரியாக இருக்கும் நிர்வாகிகளில் யார் ரஜினி பக்கமோ, கமல் பக்கமோ போவார்கள் எனத் தீவிரமாகக் கண்காணித்ததில், வன்னியர், தேவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக அணி மாற வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி யாரெல்லாம் போவார்கள் என மாவட்ட வாரியாக ஒரு பட்டியலையும் கேட்டு வாங்கியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. வன்னியர், தேவர், தலித் இந்த மூன்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் எடப்பாடி அதிகமாகப் புறக்கணிக்கிறார் என்ற புகாரையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சமாதானப் படலம் தொடங்கியிருக்கிறது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“சரி... கடைசி மெசேஜ் என்ன அதையும் அனுப்பு!” - ஃபேஸ்புக் கேட்டது.

“கமல் கட்சியில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் மறைமுகமாக அவருக்கு உதவி செய்துவருகிறார்கள். சென்னையைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் அடிக்கடி கமல் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறாராம். இப்படி கமலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் தொழிலதிபர்கள் பட்டியலை எடுத்து, அவர்களின் வருமானம், அதற்கான வரி கட்டுதல் எல்லாம் சரியாக இருக்கிறதா என விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர். அப்படிச் சரியாக இல்லை என்றால் அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்றும் சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 15 மா 2018

அடுத்ததுchevronRight icon