மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

எம்எல்ஏ பதவி ராஜினாமா: நாங்கள் தயார் நீங்கள்?

எம்எல்ஏ பதவி ராஜினாமா: நாங்கள் தயார் நீங்கள்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்று சிறப்புத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை (மார்ச் 15) துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் உரை வாசிப்புடன் தொடங்கியது. காவிரிப் பிரச்சினைக்கான சிறப்புக் கூட்டம் மாலை 3.30மணியளவில் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். முன்னதாக, “காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறோம். இதற்காகக் கடும் சட்டப் போராட்டத்தைத் தமிழக அரசு நடத்தியுள்ளது. எனவே மத்திய அரசுக்கு மேலாண் வாரியத்தை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமும் சபாநாயகர் தனபால் கோரிக்கை விடுத்தார்.

தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு பார்க்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் பிரதமர், அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்காதது ஜனநாயகத்திற்கு நெருக்கடியான ஒரு தருணமே" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும். கர்நாடகம் சொன்னதுபோல ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. தமிழகத்திற்கு முழுமையான நீரைக் கர்நாடகம் எந்த ஆண்டும் வழங்கவில்லை. இது ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்கும் நேரமல்ல. விவசாயிகள் நலனில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்" என்று கூறிய ஸ்டாலின்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம். நீங்கள் (ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து) ராஜினாமா செய்யத் தயாரா என்று கேட்டார். இதற்கு அவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு தரப்பிலிருந்தும் சிரிப்பொலி எழுந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்புத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon