மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

எண்ணெய் கசிவு: 14 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு!

எண்ணெய் கசிவு: 14 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு!

சென்னை அருகே இரு கப்பல்கள் மோதியதால் நிகழ்ந்த எண்ணெய் கசிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு இரு கப்பல் நிறுவனங்களும் 14 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையான 141 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எரிவாயுவை இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து நாட்டின் எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற சரக்குக் கப்பலும், துறைமுகத்துக்கு 32 மெட்ரிக் டன் அளவிற்குக் கச்சா எண்ணெய்யுடன் வந்த மும்பையின் டான் காஞ்சிபுரம் கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பல ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. லட்சக்கணக்கான மீன்களும், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கின.

இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்படைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பாதிப்படைந்த மீனவர்களுக்கு இழப்பீடாக 240 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என இரண்டு கப்பல் நிறுவனங்களிடமும் தமிழக அரசு கோரியிருந்தது.

இந்நிலையில், இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக இரண்டு கப்பல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் கப்பல்களை விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு கப்பல் நிறுவனங்களும் சமரசமாக பேசி இழப்பீடு தொகையாக 141 கோடி ரூபாயை அரசிடம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கப்பல் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 141 கோடி ரூபாயை 14 நாள்களில் அரசிடம் வழங்க வேண்டும், மீதமுள்ள 84 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை 21 நாள்களில் அரசிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், காமராஜர் துறைமுகத்துக்கு சுற்றுச்சூழல் துறை கோரிய தொகையான 5.68 கோடி ரூபாயை 7 நாள்களில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் காமராஜர் துறைமுகத்திலிருந்து டான் காஞ்சிபுர கப்பலைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டனர்.

மேலும், இழப்பீட்டு தொகையை இழப்பீடு கோரும் மீனவர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலித்துப் பகிர்ந்து வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon