மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஸ்பெஷல்: ஆரோக்கியம் தரும் மூலிகைச் செடிகள்!

ஸ்பெஷல்: ஆரோக்கியம் தரும் மூலிகைச் செடிகள்!

பசுமை மீது சில மனிதர்களுக்கு இருக்கும் தீராத ஆர்வம், கிடைக்கிற இடத்திலெல்லாம் செடி வைக்கும் ஆர்வத்தைத் தூண்டும். அப்படியானவர்களின் ஆர்வத்தை இன்னும் அர்த்தமுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றலாம். மூலிகைச் செடிகளை வீட்டிலேயே வளர்க்கலாம். பால்கனியில் வளர்க்கத் தகுதியான இந்த மூலிகைகள் சமையல், கைமருந்து எனப் பலவற்றுக்கு பயன்படக்கூடியவை. வழக்கமாக நமக்குத் தெரிந்த புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றுடன் இவற்றையும் சேர்த்து வளர்த்துப் பாருங்கள். உங்கள் மாடம் ஒரு குட்டி மூலிகைக் காடு ஆவதுடன், உங்கள் மனம் ஒரு புதிய குதூகலத்திற்குத் தயாராகிவிடும்.

ஓரிகனோ

​மத்திய தரைக்கடல் சமையலில் முக்கிய இடம்பிடிக்கும் மூலிகை ஓரிகனோ. சூரிய ஒளி அதிகமிருக்கும் பகுதியில் ஓரிகனோ நன்கு வளரும். சிறுநீர்க் குழாய் பிரச்சினை, இரைப்பைக் கோளாறு மற்றும் மாதவிடாய் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரும் மூலிகை ஓரிகனோ. விதைகள் மூலம் எளிதில் முளைத்துவிடும் இத்தாவரத்தை, தண்டுகள் மூலமாகவும் சுலபமாக விளைவிக்கலாம். இது 8 முதல் 10 இன்ச் உயரம் வரை வளரக்கூடியது. ஓரிகனோ விளையும் மண்ணில் அதிக ஈரப்பதம் இருக்கக் கூடாது. 18இன்ச் அளவிற்கு அடத்தியாக வளரும் ஓரிகனோவை, தோட்டத்தில் எந்த விதமான காய்கறிகளுடனும் சேர்த்துப் பயிரிடலாம்.

தைம்

​பழங்காலத்திலிருந்தே சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் மூலிகை தைம். மிகச் சிறிய இலைகளைக் கொண்ட இது குறைந்த உயரத்திற்கு வளரக்கூடிய தாவரம். இது அசைவ உணவுத் தயாரிப்பில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சூப்களில் பிளேவருக்காக சேர்க்கப்படுகிறது. வயிற்று வலி, இருமல், வயிற்றுப்போக்கு, மூட்டு வீக்கம், குடல் வலி ஆகியவற்றின் தீவிரத்தைக் குறைக்கும் தைம். விதை, தண்டு என இரண்டு வழிகளில் இதனை விளைவிக்கலாம். மூன்று வாரத்தில் வளர்ந்துவிடும். 50க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், இங்கிலிஷ் தைம்தான் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பார்ஸ்லி

​அடர்ந்த பச்சை நிற மூலிகையான பார்ஸ்லி, மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பார்ஸ்லியிலுள்ள விட்டமின்-சி மற்றும் விட்டமின்-கே, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. பார்ஸ்லியை டீயில் சேர்த்தால் செரிமானம் சீராகும். தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பார்ஸ்லி விதைகளை ஒரு தொட்டியில் மண்ணோடு சேர்த்து, வெர்மிக்குலைட் உரத்தோடு கலந்து, வெயில்படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இவற்றின் வேர்கள் சற்று அடர்த்தியாக வளரும் என்பதால், பெரிய அளவிலான தொட்டிகளைப் பயன்படுத்தலாம்.

வெந்தயம்

இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெந்தய இலை, மருத்துவக் குணங்கள் நிரம்பியது. கறி, பரோட்டா, வடை, ரொட்டி மற்றும் டால் தயாரிப்புகளில் இந்த இலை சேர்க்கப்படுகிறது. இது வயிற்று வலிக்குத் தீர்வு தரும் மருந்தாகும். அரை டீஸ்பூன் வெந்தயத்தை மோருடன் சேர்த்து, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, தினமும் குடித்துவந்தால் தொப்பையை எளிதில் குறைக்கலாம். சமைப்பதற்கு வைத்திருக்கும் வெந்தயத்தைச் சிறிதளவு மண் நிரப்பிய தொட்டியில் தூவி, அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிடவேண்டும். அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து வந்தால், சில வாரங்களில் வெந்தயச் செடி நன்கு வளர்ந்துவிடும்.

பாசில்

பார்ப்பதற்குத் துளசி போன்றே தோற்றமளிக்கும் பாசில், மூலிகையாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் பாசில் மூலிகை உதவுகிறது. பாசில் வளர்வதற்கு மிதமான வெப்பநிலையும் குறைவான தண்ணீரும் போதுமானது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாசிலை சிறிய தொட்டியில் விதைத்து, ஏப்ரல் மாதத்தில் பெரிய தொட்டிக்கு மாற்ற வேண்டும். வளரும்போது இலைகளைப் பறித்தால், அவை மேலும் நன்கு வளரும்.

லெமன்கிராஸ்

நறுமணம் கொண்ட சிறந்த மருத்துவ மூலிகைகளில் ஒன்று லெமன் கிராஸ். ஆசிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. தினமும் தேநீரில் லெமன் கிராஸ் கலந்து பருகினால், உடலிலுள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றலாம். இதற்குப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடைகளில் வாங்கும் லெமன் கிராஸ் தண்டினை, தண்ணீரில் போட்டு வைக்கவும். தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும். லெமன் கிராஸ் தண்டு 2 இன்ச் நீளத்திற்கு வளர்ந்ததும், தொட்டிக்கு மாற்றி வளர்க்க வேண்டும். லெமன் கிராஸ் குளிர்காலத்தில் நன்கு வளர்கிறது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon