மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய சமாதானப் பஞ்சாயத்து!

டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய சமாதானப் பஞ்சாயத்து!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

"திமுகவின் ஈரோடு மண்டல மாநாடு வரும் 24, 25 தேதிகளில் சரளை என்ற இடத்தில் நடக்கிறது. சேலத்திலிருந்து கோவை செல்லும் பைபாஸில் விஜயமங்கலம் டோல்கேட்க்கு முன்பாகவே மிகப்பெரிய இடத்தை சமப்படுத்தி மாநாட்டுத் திடல் தயாராகிவருகிறது. இது காற்று அதிகம் வீசும் காலம் என்பதால், மழையாக இருந்தாலும் காற்றாக இருந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தகரத்தில் மேற்கூரை அமைக்கிறார்கள். மாநாட்டு திடலில் நான்கு அடிக்கு ஒரு போகஸ் லைட் கட்ட ஆரம்பித்துள்ளனர். மருத்துவ அணி சார்பில் 24 மணி நேர மெடிக்கல் ரூமும் தயாராகி உள்ளது. எமர்ஜென்சி என்றாலும் பார்ப்பதற்கு ஏற்ப ஐசியூ செட் அப்பும் தயாராக வைத்திருக்கிறார்கள். மாநாட்டு மேடை வரையில் எந்த இடையூறும் இல்லாமல் கார் செல்லும் வகையில் பிரமாண்ட வழி உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை பார்வையிட இன்னும் சில தினங்களில் செயல் தலைவர் ஸ்டாலின் வருகிறார். அதனால் இரவு பகலாக வேலைகள் நடக்கிறது.

மாநாட்டுக்குப் பொறுப்பாளர் ஈரோடு முத்துசாமி. மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது மாநாடு விஷயங்களிலும் அப்பட்டமாக தெரிய ஆரம்பித்துள்ளது. முத்துசாமியை பொறுத்தவரை மாநாட்டுத் திடலே கதியென கிடக்கிறார். ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறார். திமுகவின் குறிப்பாக ஸ்டாலின் தொடர்பான கண்காட்சி ஒன்றையும் இங்கே உருவாக்கி வருகிறார்கள். அதற்கான படங்களை கூட முத்துசாமியே எந்த இடத்தில் எதை மாட்ட வேண்டும் என்பதை நின்று கவனிக்கிறார். சுப்புலட்சுமியை பொறுத்தவரை அவரும் மாநாட்டு திடலுக்கு வந்தாலும், முத்துசாமி இருக்கும் திசை பக்கமே திரும்புவது இல்லையாம். அவர் தனது ஆதரவாளர்களுடன் தனியே வலம் வருகிறார். மாநாட்டு.முகப்பு, மேடை எல்லாமே ஸ்டாலின் வழிகாட்டல் படிதான் நடக்கிறது. தலைமை செயலகத்தை நினைவுப்படுத்தும் வகையில் மேடை இருக்கும் என்று சொல்கிறார்கள்." என்று முடிந்தது ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், " கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்துக்கு சென்றார் எடப்ப்பாடி பழனிசாமி. திமுக மாநாடு நடக்கும் இடத்தை கிராஸ் செய்தபோது, காரை ஸ்லோ செய்யச் சொல்லி பார்த்துவிட்டுப் போனாராம் எடப்பாடி" என்ற மெசேஜ்ஜை தட்டிவிட்டது. அதைப் படித்தகையோடு ஃபேஸ்புக் ஒரு ஸ்டேட்டசைப் போட்டது.

”பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலா குடும்பத்தாரை வரவழைத்து ஒரு மணி நேரம் குடும்பப் பஞ்சாயத்து செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு பெங்களூர் சிறையில் சசிகலாவை அடைக்கப்பட்டுச் சரியாக ஒருவருடம் முடிந்துவிட்டது. சசிகலா சிறைக்குள் இருந்தாலும் குடும்பம், தொழில், அரசியலைக் கண்காணித்து இயக்கிவருகிறார்.

தினகரனுக்கும் விவேக்குக்கும் அடிக்கடி சிறு மோதல்கள் நடைபெற்றுத்தான்வருகிறது. இன்னொரு பக்கம் சசிகலா கணவர் நடராஜன் சகோதரர்கள் முரண்பட்டுவருகிறார்கள், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஒருபக்கம் நடைபெற்றுவருகிறது. இந்த சூழல்களைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத்தான் நேற்று (மார்ச் 12) தினகரன், விவேக் அவரது மனைவி கீர்த்தனா, இளவரசி மருமகன் ராஜராஜன், நடராஜன் சகோதார்கள் விஸ்வநாதன், ராமச் சந்திரன், பழனிவேல், வழக்கறிஞர் அசோகன், ஜெயலலிதாவுக்கு உதவியாளராகவிருந்த கார்த்திக் ஆகிய பத்துபேர் சசிகலாவால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மதியம் 1.15 மணிக்குச் சிறைக்குள் சென்றவர்கள் ஒரு மணிநேரம் கழித்துதான் வெளியில் வந்தார்கள்.

உறவுகள் எல்லாரிடமும் நலம் விசாரித்த சசிகலா, அடுத்தபடியாக கணவர் நடராஜனின் சகோதரர்களிடம் சிலநிமிடங்கள் பேசியிருக்கிறார். கார்த்திக்கிடமும் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தாராம் சசிகலா. கடைசியாகத்தான் விவேக் மற்றும் தினகரனிடம் தனித் தனியாக பேசியுள்ளார். இருவரும் தங்களது மன வருத்தங்கள் பற்றி சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின், ‘அனுராதா இனி தினகரனின் அரசியல் டூர் புரோகிராம்களுக்கு உதவியா இருக்கட்டும். அக்காவுடன் கட்சி ரூர் போகும்போது அனுவும் வந்திருப்பதால் அவர் அதை பண்ணட்டும். ஜெயா டிவி சேனல்களை விவேக் தொடர்ந்து கவனிக்கட்டும்’ என்றெல்லாம் சமாதானப் பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தாராம் சசிகலா’’ என்று ஸ்டேட்டஸ் போட்ட கையோடு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon