மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

சென்னை டிரக்கிங் கிளப் விளக்கம்!

சென்னை டிரக்கிங் கிளப் விளக்கம்!

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அந்த மலை ஏற்றத்தை ஏற்பாடு செய்த சென்னை டிரக்கிங் கிளப் முகநூலில் விளக்கம் அளித்துள்ளது.

குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் சுற்றுலாவுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். தீயில் சிக்கியவர்களை மீட்கப் போர் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்துவந்தன. தீ விபத்தில் காயமடைந்த திவ்யா உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்தவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உரிய அனுமதியின்றி டிரக்கிங் சென்றதாகச் சென்னை டிரக்கிங் கிளப் மீது புகார் எழுந்ததை அடுத்து அதன் உரிமையாளர் பீட்டர் தலைமறைவானார். குரங்கணி தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை டிரக்கிங் கிளப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விளக்கத்தை யார் அளித்தது என்பது குறித்து எந்த விவரமும் குறிப்பிடவில்லை.

சென்னை டிரக்கிங் கிளப் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "மகளிர் தினத்தையொட்டி தேனியில் உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு மலை ஏற்றம் மேற்கொண்டபோது, ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிப் பலியானவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் அனுபவம் மிக்க டிரக்கிங் நிர்வாகிகளான நிஷா, திவ்யா, மற்றும் அருண், விபின் ஆகியோர் 27 பேரை குரங்கணி மலைப்பகுதிக்கு மலை ஏற்றத்துக்கு அழைத்துச் சென்றனர். உள்ளூர் வழிகாட்டியின் துணையுடனேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 10ஆம் தேதி எங்கள் குழுவினர் குரங்கணி அடிவாரத்தில், வனத் துறையின் அனுமதிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, சோதனைச் சாவடியின் நுழைவுச் சீட்டுடன் மலை ஏற்றத்துக்குப் புறப்பட்டனர். குரங்கணியில் இருந்து கொழுக்கு மலை வரை செல்வது வழக்கமான ஒன்றாகும். உள்ளூர் வழிகாட்டியும், டிரக்கர்களும் இணைந்தே பயணத் திட்டத்தை உருவாக்கினர். சனிக்கிழமை காலை பயணத்தைத் தொடங்கியபோது, காட்டுத் தீக்கான எந்த வித அறிகுறிகளும் இல்லை. அன்று இரவு கொழுக்கு மலை டீ எஸ்டேட் பகுதியில் எங்கள் குழுவினர் தங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை எங்கள் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு, குரங்கணிக்கு வரும் பாதையின் நடுப்பகுதியை அடைந்திருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் தங்கள் வழக்கமான பணிகளுடன் காய்ந்த புற்களுக்குத் தீவைத்து எரித்துக்கொண்டிருந்தனர். போடி பள்ளத்தாக்குப் பகுதியில் காற்று பலமாக வீசி வந்ததால் மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து தீ மேல்நோக்கி பரவத் தொடங்கியது.

வேகமாகத் தீ பரவியதால், எங்கள் குழுவினருக்கு, எதிர்வினையாற்றப் போதுமான நேரம் இல்லை. தீயிலிருந்து தப்பிக்க எங்கள் குழுவினர் மலையில் இருந்து வேகமாகக் கீழே இறங்க முயற்சித்தபோது, எதிர்த் திசையில் இருந்து பரவிய தீயில் சிக்கிக்கொண்டனர். அதன் பின் உள்ளூர் வழிகாட்டிக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் மூலம், எங்கள் குழுவினர் காட்டுத் தீயில் சிக்கிக்கொண்ட பகுதியின் சரியான இடம் குறித்த தகவல் தரப்பட்டது. உடனடியாக வனத் துறைக்கு தகவல் தரப்பட்டு, மீட்புப் பணியும், தேடுதல் பணியும் வேகப்படுத்தப்பட்டது. எங்கள் குழுவில் இருந்த அருண், விபின் ஆகிய இருவரும் பல்வேறு நாடுகளில் மலை ஏற்றப் பயிற்சி பெற்ற 7ஆண்டு அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் இறக்கும்வரை, டிரக்கிங் வந்தவர்களின் உயிரைக் காக்கப் போராடியிருக்கிறார்கள். அவர்களின் இழப்பை எங்களால் ஏற்க முடியவில்லை. டிரக்கிங்கில் பங்கேற்ற திவ்யா முத்துக்குமரன் என்பவர் 3 பேரின் உயிரைக் காப்பாற்றி, மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சிக்கு மீண்டும் சென்றபோது, அவர் தீயில் உயிரிழந்துள்ளார்.

சென்னை டிரக்கிங் கிளப், பெண்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும், உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. எந்த விதமான லாப நோக்கிலும் மலை ஏற்றம் நடத்தப்படவில்லை. இந்தக் குரங்கணி மலை ஏற்றத்தில் நாங்கள் முறைப்படியான பாதுகாப்பு விதிமுறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினோம். இந்த மலை ஏற்றத்தில் நடந்த காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க எங்களின் அனுபவம் நிறைந்த, திறமையான வழிகாட்டிகள் தங்கள் உயிரையும் இழந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்தனையும் செய்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon