மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மார்ச் இறுதியில் ‘காலா’ இசை?

மார்ச் இறுதியில் ‘காலா’ இசை?

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் இறுதியில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினி-ரஞ்சித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் காலா. இதன் டீசர் வெளியாகி 2கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. காலா படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். எனவே படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதத்திற்குள் நடத்தத் திட்டமிட்டுவருகிறார்கள்.

இதற்கிடையே ஆன்மிகப் பயணமாக மார்ச் 10ஆம் தேதி காலை ரஜினி திடீரென்று இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 அல்லது 15 நாட்கள் வரை ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஆகவே அவர் திரும்பி வந்த பிறகே காலா படம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் மார்ச் 31ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்பு, இசை வெளியீடு எனப் படம் சம்பந்தமான எந்த நிகழ்வும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் காலா படத்தின் இசை வெளியீடு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon