மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அபராதத் தொகையைக் குறைத்த எஸ்பிஐ!

அபராதத் தொகையைக் குறைத்த எஸ்பிஐ!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளுக்கான அபராதத் தொகை 75 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.3000 இருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருப்பு வைத்திருப்போரிடம் மாதந்தோறும் ஜிஎஸ்டியுடன் கூடிய அபராதத் தொகையாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நடவடிக்கை வாடிக்கையாளர்களிடையே எதிர்ப்புகளைக் கிளப்பியது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 1முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களுக்கான அபராதத் தொகை 75 சதவிகிதம் வரையில் குறைக்கப்படும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர் மற்றும் நகர்ப்புற எஸ்பிஐ கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகை 50 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகை 40 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், ரூ.30லிருந்து ரூ.10 ஆகவும், ரூ.20லிருந்து ரூ.7.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வங்கியின் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா, ஸ்க்ரால் ஊடகத்திடம் பேசுகையில், "எங்களது வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டே அபராதத் தொகையினை நாங்கள் இப்போது குறைத்துள்ளோம். எங்களது வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் தங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்குகளை, அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் அபராதத்தைத் தவிர்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon