மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காவிரி: மத்திய அரசு செவிசாய்க்கவில்லை!

காவிரி: மத்திய அரசு செவிசாய்க்கவில்லை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு செவி சாய்ப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5ஆம் தேதி ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அவையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்றையக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மையப்பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மக்களவை 12மணி வரையிலும் மாநிலங்களவை 2மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் ஏழாவது நாளாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வேதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஏழாவது நாளாக இன்றும் (மார்ச் 13) அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு செவி சாய்ப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையை நடத்த முடியாத அளவுக்கு அதிமுக உறுப்பினர்கள் போராடி வருகிறோம். அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக எந்த அலுவலும் நடைபெறவில்லை. எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, "தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேட்டி கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறு போராட்டமாவது நடத்தியிருப்பார்களா என்று கேள்வி எழுப்பிய தம்பிதுரை, அவர்களிடம் எம்.பி.க்கள் யாரும் இல்லை என்பதற்காக எங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் ராஜினாமா செய்வதற்குத் தயார்தான். ஆனால் அதற்கான பலன் என்னவென்று கூற வேண்டும். நாங்கள் போராட்டம் நடத்துவதால்தான் உலக அளவில் இப்பிரச்னை குறித்து ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். இன்று அவையின் மையப்பகுதிக்கு சென்று உறுப்பினர்கள் போராடினார்கள். அதனால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றும் தம்பிதுரை கூறினார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon