மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கொல்லிமலை மலையேற்றத்துக்குத் தடை!

கொல்லிமலை மலையேற்றத்துக்குத் தடை!

குரங்கணி மலை தீ விபத்தைத் தொடர்ந்து கொல்லி மலையிலும் ட்ரெக்கிங் செல்லத் தடை விதிக்கப்படுவதாக இன்று (மார்ச் 13) அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர், சென்னையைச் சேர்ந்த 24 பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கொழுக்கு மலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றனர். இவர்கள் நேற்று முன் தினம் (மார்ச் 11) கொழுக்கு மலையிலிருந்து மீண்டும் குரங்கணிக்குத் திரும்பியபோது, எதிர்பாராத விதமாகக் காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு உதவிகளுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மலைப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் எனப் பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டன.

இந்தத் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை நிஷா என்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று காலை திவ்யா என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொல்லிமலையிலும் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மைலைத்தொடர், 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கும் மலையேற்றப் பயிற்சிக்குப் பலர் வந்து செல்கின்றனர். தற்போது, மே 31ஆம் தேதி வரை காரவள்ளி, புளியஞ்சோலை வழியாகக் கொல்லிமலைக்கு மலையேற்றப் பயிற்சியை மேற்கொள்ள வனத் துறை தடை விதித்துள்ளது. நேற்று கொடைக்கானல், ஆனைமலை பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல வனத் துறை தடை விதித்தது. மேலும், கேரளா முழுவதும் மலையேற்றத்துக்குத் தற்காலிகத் தடை விதித்து அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon