மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அமிதாப்புக்கு உடல்நலக்குறைவு!

அமிதாப்புக்கு உடல்நலக்குறைவு!

ஜோத்பூரில் நடைபெற்று வரும் தொடர் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 75 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அமிதாப் தற்போது விஜய் கிருஷ்ணா ஆச்சாரியா இயக்கத்தில் ஆமிர் கான், காத்ரீனா கைப் நடிக்கும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதற்காக ஜோத்பூர் சென்றுள்ள அவர் தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஒரு வார காலமாக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தன்னை பரிசோதிக்க மருத்துவக் குழு வரவேண்டும் என்று தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து காலை திடீரென அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக ஜோத்பூர் விரைந்து வந்த நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு அவரைப் பரிசோதித்தனர். அதன் பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் தனிவிமானம் மூலம் ஜோத்பூரிலிருந்து மும்பைக்கு வரவுள்ளார்.

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் தயாரிப்பு நிர்வாகி ராகவேந்திரா, “ஜோத்பூரில் கடும் வெயில் நிலவுவதால் அமிதாப்புக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மற்றபடி வேறெதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “அமிதாப் பச்சன் விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு எனச் செய்தி வெளியானது. ஆனால் அதை வதந்தி என அமிதாப் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon