மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பாக். மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவர் பயிற்சி!

பாக். மருத்துவர்களுக்கு  இந்திய மருத்துவர் பயிற்சி!

இந்தியாவைச் சேர்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் என்றால் மக்களுக்கு எப்போதும் சண்டை என்ற ஞாபகம்தான் வரும். ஏனென்றால் எப்போதும் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும். சில சமயங்களில், ‘இந்தியா - பாகிஸ்தானை போலச் சண்டை போடுறீங்க?’ என்று கேள்வியும் வீட்டிலும் கல்லூரிகளிலும் கூட எழுந்திருக்கும்...

ஆனால், அதையும் மீறி மனிதநேயம் என்பது இரு நாட்டினரிடையே இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு உதாரணம் மருத்துவ உலகில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கப்படுவதும், அங்குள்ள மருத்துவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுவதும் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் இரு நாட்டினரிடையே மனிதநேயம் என்ற உணர்வு வெளிப்படுகிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான சுபாஷ் குப்தா, பல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான டவ் சுகாதார பல்கலைக்கழக மருத்துவமனையில் பலர் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு சுபாஷ் குப்தா அறுவை சிகிச்சை நடத்த உள்ளார். மேலும், அந்த மருத்துவமனை மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை குறித்து பயிற்சியும் நடத்த உள்ளார்.

இந்தத் தகவல்களை டவ் சுகாதார பல்கலைக்கழகத் துணைவேந்தர் சையத் குரேஷி தெரிவித்துள்ளார். மேலும் “சுபாஷ் குப்தாவின் பயிற்சியின் மூலம் பாகிஸ்தான் மருத்துவர்கள் எதிர்காலத்தில் தாங்களாகவே இவ்வகை அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளிலும், பொது மருத்துவமனைகளிலும் இந்திய மருத்துவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு இந்தச் சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சையத் குரேஷி கூறியுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon