மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

முதல்வர் கூறுவது பொய்யானது!

முதல்வர் கூறுவது பொய்யானது!

மேட்டூர் அணை தூர்வாரும் விவகாரத்தில் முதல்வர் கூறும் தகவல்கள் பொய்யானவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்

சேலத்தில் நேற்று நடைபெற்ற மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், "மேட்டூர் அணை 84 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு முதல் தூர்வாரப்படுவதால் அணையின் கொள்ளளவு 10 முதல் 15 டி.எம்.சி. அளவுக்கு அதிகரிக்கும். அது மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்றதால் சேலம் மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

முதல்வர் கூறும் இந்தத் தகவல்கள் பொய்யானவை என்று குறிப்பிட்டு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 13) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மேட்டூர் அணையைத் தூர்வாரியதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய தகவல்கள் பொய்யானவை. புள்ளிவிவரங்கள் தவறானவை என்பது தான் உண்மை. மேட்டூர் அணையை எவ்வளவு ஆழத்திற்கு தூர் வாரினாலும் அதன் கொள்ளளவை 15 டி.எம்.சி. அளவுக்கு அதிகரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம் ஆகும்" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மேட்டூர் அணையைத் தூர்வாருவதில் முறைகேடு நடைபெறுவதன் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்பதே உண்மை. மேட்டூர் அணையை தூர்வாரியதால் அணையின் நீர் கொள்ளளவு 7 மில்லியன் கன அடி, அதாவது 0.007 டி.எம்.சி. அளவுக்கு அதிகரித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, அணையை தூர்வாருவதன் மூலம் அதன் கொள்ளளவை 15 டி.எம்.சி. வரை அதிகரிக்க முடியும் என்பது மக்களையும், உழவர்களையும் ஏமாற்றி முட்டாள்களாக்கும் செயல் " என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அன்புமணி தனது அறிக்கையில், "மேட்டூர் அணையில் நடைபெற்றது தூர் வாரும் பணி அல்ல. அது வண்டல் மண் கொள்ளை ஆகும். அணையிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் மேட்டூர் மற்றும் அதையொட்டியப் பகுதிகளில் விளைநிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.. இதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தடுப்பணைகள் கட்டும் திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு எங்கெங்கு எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன; அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் உள்ளன என்பதையும், இனி வரும் ஆண்டுகளில் எங்குத் தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன என்பதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றை ஊழல் செய்வதற்கான வெற்று அறிவிப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon