மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காட்டுத் தீ: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை!

காட்டுத் தீ: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை!

குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குமாறு இன்று (மார்ச் 13) தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணியில் மார்ச் 11 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம் மலையேற்றத்துக்குச் சென்றவர்கள் சிக்கினர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், "குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு தமிழக அரசு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைப் பிரிவுகளையும், அவசர சிகிச்சைப் பிரிவுகளையும் (Emergency Medicine) உருவாக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அவசர சிகிச்சை மேற்படிப்புகளைத் தொடங்கிட வேண்டும். இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க முடியும்" என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon