மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பு!

அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பு!

இந்தியா கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 208.99 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்த்துச் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 12ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சரான சி.ஆர்.சவுதரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில், “2014ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல், 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் மொத்தம் 208.99 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார். ஏற்றுமதி சார்ந்த மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், “செயல்பாட்டில் இருக்கும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளின் எண்ணிக்கை 2,197ஆகக் குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 2,239ஆக இருந்தது” என்று தெரிவித்தார்.

ஏற்றுமதி சார்ந்த ஆலைகளின் எண்ணிக்கை 2015-16 நிதியாண்டில் 2,269 ஆகவும், 2014-15 நிதியாண்டில் 2,293 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி ஆலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரையின் கீழ் பிப்ரவரி 6ஆம் தேதி காண்ட்லா சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மேம்பாட்டு ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏற்றுமதி ஆலைகள் அனைத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறி வருவது தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளும்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon