மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வர்மா: கவுதமியின் முக்கிய தகவல்!

வர்மா: கவுதமியின் முக்கிய தகவல்!

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கும் ‘வர்மா’ படத்திற்கு கதாநாயகியாக கவுதமி மகள் சுபலட்சுமி நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் கவுதமி.

'விஸ்வாசம்’ படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பதும் பின்னர் மறுப்பதுவுமாக ஊடகங்களில் எப்படி செய்திகள் வெளிவந்ததோ, அதைப் போலவே விக்ரம் மகன் துருவ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கும் வர்மா படத்திற்கான கதாநாயகி அறிவிப்பும் வெளியாகிவருகிறது. விஸ்வாசத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் ‘வர்மா’ படத்திற்கான நாயகி தேர்வு இன்னும் முடிந்தபாடில்லை.

சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்த ஸ்ரேயா ஷர்மா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்றும், நாச்சியார் படத்தின் மூலம் கவனம்பெற்ற இவானா நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இவையனைத்தும் பொய்யாகி, கடைசியில் கவுதமி மகள் சுபலட்சுமிதான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று வெளியான செய்தி உண்மையாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் சுபலட்சுமியும் வர்மா படத்தின் நாயகி இல்லை என்பதைச் சொல்லும் விதமாக இருக்கிறது.

இது சம்பந்தமாக கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மகள் திரையுலகில் அறிமுகமாவது குறித்த செய்திகளைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். சுபலட்சுமி படிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். அவர் நடிப்பது குறித்து எந்தவிதத் திட்டமும் தற்போது கிடையாது. அவரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இதனால் ‘வர்மா’ படத்தில் சுபலட்சுமி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon