மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அன்னவாசல் ஜல்லிக்கட்டு : ஒருவர் மரணம்!

அன்னவாசல் ஜல்லிக்கட்டு : ஒருவர் மரணம்!

புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 13) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே தான்றீஸ்வரத்தில் சத்ரு சம்கார மூர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்தப் போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளுடன், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார். கூவாட்டுப் பட்டியைச் சேர்ந்த முத்து (25) என்பவர் வாடிவாசலிலிருந்து தனது காளையை அவிழ்த்துவிட்டார். அப்போது மற்றொருவரின் மாடு அவரை முட்டியது. இதில் அவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக் காவலர் ஆனந்த் என்பவரை மாடு முட்டியதில் காயமடைந்தார்.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி, காணும் பொங்கலன்று காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 2 பேர் மாடுமுட்டி உயிரிழந்தனர். காரைக்குடி கழனிவாசல் மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமநாதன் (45) என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தெக்கியூரைச் சேர்ந்த காசி (45) என்பவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த போது, மாடு முட்டி உயிரிழந்தனர். அதேபோல், மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார். ஜனவரி 14ஆம் தேதி பொங்கலன்று, பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (19) என்ற பார்வையாளர் மாடு முட்டி உயிரிழந்தார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon