மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம்!

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம்!

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் 1.16 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய அமலாக்கத்துறை.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, சிபிஐயினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கார்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு, வரும் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான அட்வாண்டேஜ் ஸ்டேரட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவதாக அறிவித்துள்ளது மத்திய அமலாக்கத்துறை. இதன் மதிப்பு சுமார் 1.16கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதியைப் பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின் அட்வாண்டேஜ் ஸ்டேரட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவியதாக வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. இது தொடர்பாக, மத்திய அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தியின் நிறுவனம் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது என்றும், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அமலாக்கத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon