மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

இரண்டு வெற்றிகளுடன் முதலிடம்!

இரண்டு வெற்றிகளுடன் முதலிடம்!

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி-20 தொடரில் நேற்று (மார்ச் 12) இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வோர் அணியும் பிற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணி இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஏனெனில் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது என்பதால் சேஸிங் செய்த அணிகளே அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னர் நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்காமல் நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், 1 ஓவர் மட்டுமே குறைக்கப்பட்டு 19 ஓவர்களாகப் போட்டி நடத்தப்பட்டது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். முதல் ஓவரிலேயே இலங்கை அணி 15 ரன்களை அடித்து அசத்தியது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஓவரின் முதல் பந்தும் சிக்ஸராகச் சென்றது. ஆனால், அவர்கள் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஷர்துல் தாகூர் சிறப்பாகப் பந்து வீசி குணதிலகா விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் வந்த வீரர்கள் பெரும்பாலும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

எனவே இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய குஷல் மெண்டிஸ் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். நிர்ணயம் செய்யப்பட்ட 19 ஓவர்களில் இலங்கை அணி 152 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (11) மற்றும் ஷிகர் தவன் (8) இருவரும் ஏமாற்றமளித்தது குறைந்த ரன்களில் வெளியேறினர். அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கியது. கடந்த போட்டியில் வங்கதேச அணி இந்த மைதானத்தில் தான் 215 ரன்களை சேஸ் செய்து இலங்கை அணியை வீழ்த்தியது என்பதால் இந்திய அணியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் சுரேஷ் ரெய்னா (27) மற்றும் ராகுல் (18) ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணி சற்றே தடுமாறத் தொடங்கியது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணி வீரர்களுக்கு கடும் போட்டியாக அமைந்தனர். ஆனால், மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. எனவே, இந்திய அணி 17.3 ஓவரில் 153 ரன்களைச் சேர்த்து விக்கெட் 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு தொடரில் இரண்டு வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதனால் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தாகூர் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon