மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மாவோயிஸ்ட் தாக்குதல்: 9 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலி!

மாவோயிஸ்ட் தாக்குதல்: 9 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் 10 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திவருவதால், அவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எஃப். அதிரடிப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்டாரம் (Kistaram) வனப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வாகனத்தில், 212ஆவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்றுள்ளனர்.

வனப் பகுதியில் வீரர்கள் தினமும் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருவதை அறிந்த மாவோயிஸ்டுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதிக அளவு கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துள்ளனர். இதை அறியாமல் சுமார் 19 வீரர்கள் இன்று ( மார்ச் 13) அங்கு சென்றபோது கண்ணி வெடிகள் மொத்தமாக வெடித்ததால், வாகனம் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சில வீரர்களில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் சில வீரர்கள் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த மாவோயிஸ்டுகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மாவோயிஸ்டுகளின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையிலும் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சிலர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 வீரர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வீரரும் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் 9 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படையினரால் 11 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மாவோயிஸ்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்பதர் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon