மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காங்கிரசில் கலகக் குரல்!

காங்கிரசில் கலகக் குரல்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து 122 பேர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற குமுறல் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே எழுந்துள்ள நிலையில், தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து நேற்று (மார்ச் 12) சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்.

காரணம் என்ன

இந்த போராட்டத்துக்கான காரணம் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கட்சிக்காகப் பாடுபடுபவர்கள், சொந்த செலவில் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், கட்சிக்காக உழைப்பவர்களைப் புறக்கணித்துவிட்டு சத்தியமூர்த்தி பவனை எட்டிப் பார்க்காதவர்கள், டீ, காபி வாங்கிக் கொடுக்கும் எடுபிடிகள், வட்டத் தலைவர் பதவிக்குக்கூட லாயக்கில்லாதவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பதவி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர், குஷ்பு, விஜயதரணி ஆகியோர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பெண்கள் குடித்தால் என்ன தவறு என்று தமிழக கலாச்சாரத்துக்கு எதிராகவும், பெண்களைத் தவறான பாதையிலும் கொண்டுசெல்லும் குஷ்புவுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கும் விஷயத்தில் ராகுல் காந்திக்கு எதிராகப் பேட்டி அளித்த விஜயதரணிக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு, ஏஐசிசி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கராத்தே தியாகராஜன் முன்வைத்துள்ளார்.

தலித்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

இதற்கிடையே, இந்தப் பட்டியலில் தலித் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரான ஆர்.என். அமிர்தராஜா கூறுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆதிதிராவிட பட்டியல் இனத் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சேவாதளம், விவசாயப் பிரிவு என்று படிப்படியாக நேர்மையாகக் கடினமாக உழைத்தாலும் கட்சியின் அங்கீகாரப் பொறுப்புகளான வட்டாரத் தலைவர், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆக வர முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட விவசாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதியில் சமூக நீதியுடன் முறையான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ராகுல் காந்தி சொன்னது போல அரசியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு கிடைப்பது செவ்வாய் கிரகம் சென்று வருவதற்கு ஒப்பானதாக உள்ளது. ஜனநாயகப் பேரியக்கமான காங்கிரசில் உண்மையாக உழைத்தால் யாருடைய தயவுமின்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கட்சியின் சாமானிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மாநில, தேசியத் தலைவர்களின் நடவடிக்கைகள் உணர்த்த வேண்டும்.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கதராடை அணிந்து மூவர்ணக் கொடித் துண்டைக் கழுத்தில் அணிந்துகொண்டு இளம்பிராயத்தில் சுக துக்கங்களை மறந்து இந்திய தேசிய காங்கிரஸ் பணியில் ஈடுபடும் எங்களைப் போன்றோரின் பாவங்களை யாரும் சுமக்க வேண்டாம்.

காங்கிரஸ் தமிழகத்தில் வெகுஜன சக்தி பெற பொறுப்புகள் சமூக நீதியுடன் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதைத் தலைவர்கள் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் மீது புகாரா?

இந்நிலையில், தன்னைப் பற்றி விமர்சித்துள்ள கராத்தே தியாகராஜன் மீது டெல்லி தலைமையிடம் குஷ்பு புகாரளித்ததாக இன்று (மார்ச் 13) செய்திகள் பரவியது. இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்துள்ள குஷ்பு, “அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய நபர் கிடையாது. வெறும் விளம்பரம் தேடுபவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon