மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: மோடி

காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: மோடி

டெல்லியில் இன்று நடைபெற்ற "காசநோயை ஒழிப்போம்" என்ற மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனக் கூறினார்.

"காசநோயை ஒழிப்போம்" என்ற மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்ததுடன், காசநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கிவைத்தார்.

"காசநோய் இன்னும் முற்றிலுமாக இந்தியாவில் ஒழிக்கப்படவில்லை. இந்நோயை ஒழிக்க அரசு தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காசநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் குறிப்பாக ஏழை மக்கள் இந்நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை குறித்து ஆராய்ந்து, புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்குள் காசநோயானது முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். பொதுமக்களுடன் இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும், அதனைத் தடுப்பதற்கு 1 ஆண்டுக்காலம் போதும். விரைவில் காசநோய் பரவுவதைத் தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

காசநோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் 75 சதவீதம் குணமடையும். ஆனால் பலர் அதற்காகச் சிகிச்சை எடுக்காததால் நோயானது தீவிரமடைகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 லட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.மேலும் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பிநட்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon