மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

குற்றப் பத்திரிகையில் சாதி, மதம்: வலுக்கும் எதிர்ப்பு!

குற்றப் பத்திரிகையில் சாதி, மதம்: வலுக்கும் எதிர்ப்பு!

காவல் துறையில் பதிவு செய்யப்படும் கணினிமயமாக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் இப்போது புதிதாக குற்றவாளியின் சாதி, மதம் ஆகியவை கேட்கப்படுகின்றன. இது ஆபத்தான வேலை என்று மனித உரிமை ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் குற்றங்கள் மற்றும் குற்றம் இழைப்போர் தொடர்பான தகவல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இது தேசிய அளவில் ஒட்டுமொத்தத் தகவலையும் ஒன்றிணைக்கும். குற்றங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இதில் பதிவு செய்யலாம். மாநில அளவில் மாநில குற்ற ஆவண மையமும், இந்திய அளவில் தேசியக் குற்ற ஆவண மையமும் செயல்படுகிறது அனைத்துத் தகவல்களும் தாள் ஆவணங்களாகப் பராமரிக்கப்பட்டன.

அதன் பிறகு மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டது. CIPRS (Common integrated police records) உருவாக்கப்பட்டு, புகார் தொடர்பாகவும் வழக்கு விசாரணை ஆவணம் (போலீஸ் டைரி), தொடர்பாகவும் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது. இது 2016ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அடிப்படையில், குற்றப் பத்திரிகையைக் கணினி முலம் பதிவு செய்ய வேண்டும்.

அப்படிக் கணினிமயம் ஆக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் புதியதாக ப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமானதாக, குற்றம்சாட்டப்பட்டவரின் மதம், சாதி, பாஸ்போர்ட் எண், ஜாதியின் கீழ் அவர் பட்டியல் வகுப்பினரா அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா என்பதை எல்லாம் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

அது மட்டுமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரின் தற்காலிகக் குற்ற எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வழக்கறிஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் இளங்கோவன், “குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தற்காலிகக் குற்ற எண் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த வழக்கிலிருந்து சம்மந்தபட்ட நபர் விடுதலை செய்யபட்டாலும் அந்தத் தற்காலிகக் குற்ற எண் நீக்கப்படுவதில்லை. எனவே அவர் விடுதலை ஆனாலும் குற்றவாளியாகத்தான் இருக்கிறார்” என்று கூறினார்.

“குற்றப் பத்திரிகையில் ஜாதி,மதம் கேட்பதால், அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது ஒருவேளை நீதிபதியும் குற்றம் சாட்டப்பட்டவரின் சாதியையோ மதத்தையோ சேர்ந்தவராக இருந்தால் தேவையற்ற யூகங்களுக்கு இடம் கொடுத்துவிடும். இதில் ஜாதி, மதம் கேட்பதால் பிரிவினை உண்டாக்கும் வகையில் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஆக குற்றப் பத்திரிக்கையில் சாதி, மதத்தைச் சேர்த்ததே குற்றம்” என்று கடுமையாக சாடினார்.

“உள்ளடக்க ரீதியாக இந்தக் குற்றப் பத்திரிகை என்பது சட்டம் சார்ந்த தமிழ் மொழியாக இல்லை. இதை தயாரிக்கும்போது சட்ட வல்லுனர்களின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். அதுவும் கேட்கவில்லை. தமிழைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் கணினிமயமாக்கப்பட்ட குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு சட்டச் சொற்களுக்கான தமிழ் அகராதி கொண்டுவரப்பட்டது. ஆனால், அதில் இருக்கும் சட்டச் சொற்களைக் குற்றப் பத்திரிகையில் பயன்படுத்தாததால் சட்ட ரீதியான தவறுகள் அதிக அளவில் உள்ளன” என்று குறிப்பிட்டார் வழக்கறிஞர் இளங்கோவன்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon