மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மூன்று நாட்களாக எரிந்த காட்டுத் தீ அணைப்பு!

மூன்று நாட்களாக எரிந்த காட்டுத் தீ அணைப்பு!

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீ அணைக்கப்பட்டதாக இன்று (மார்ச் 13) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கம்பத்ராயன் கிரி மலை உள்ளது. வறட்சியின் காரணமாக இந்த மலையில் பெரும்பாலான பகுதிகள் காய்ந்து சருகாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 9) இரவு இந்தக் காட்டில் தீடிரெனத் தீப்பிடித்தது. இதில் 300 ஏக்கர் பரப்பு வனப்பகுதி எரிந்து நாசமாகியது. மூலிகை மற்றும் விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின. தீ பரவாமல் தடுக்கச் சுமார் 50 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வனத்தில் முகாமிட்டனர். கர்நாடக - தமிழக எல்லையான கேர்மாளம் வனப் பகுதியிலும் தீ பரவியதால், 300 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்றன. வனத் துறையினர் நேற்று முழுவதும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்று நாட்களாக எரிந்த காட்டுத் தீ இன்று முழுமையாக அணைக்கப்பட்டது. “மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீயைப் பல்வேறு நடவடிக்கைகளால், நேற்று கட்டுக்குள் கொண்டுவந்தோம். மீண்டும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது, எவ்வளவு பரப்பு எரிந்து சேதமாகியுள்ளது என்பதைக் கணக்கெடுத்துவருகிறோம்” என சத்தியமங்கலம் வனஅதிகாரி ஜான்சன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon